விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகரில் அரசு பேருந்து போக்குவரத்து கழக பணிமனை கிளை ஒன்று உள்ளது. இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி அரசு பேருந்து ஒன்று நேற்று திண்டிவனத்தில் இருந்து நெடி மேழியனூர் சென்று அங்கிருந்து திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை வீடூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் என்பவர் ஓட்டி வந்தார். கொடிமா என்ற கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவர் நடத்துநராக இருந்தார்.
இந்தப் பேருந்து ஆலகிராமம் பகுதியைத் தாண்டி சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் எதிர்பாராத விதமாக தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தப் பேருந்து விபத்தில், 40க்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கிக்கொண்டனர். அப்பகுதியில் இருந்த மக்கள் ஓடி சென்று பேருந்தில் இருந்த பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதாரம் இன்றி அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திண்டிவனம், மயிலம், பெரியதச்சூர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டதோடு ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து பெரியதச்சூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.