இன்றைக்கு உள்ள பொருளாதர சூழ்நிலையில் ஈசியான வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசையில் இருக்கிற பணத்தையும் இழந்து வருகிற சூழ்நிலை தற்போது நிலவுகிறது.
மக்களின் இந்த பேராசை மனநிலையை பயன்படுத்தி பல்வேறு வழிகளில் மோசடி கும்பல் தமிழகம் முழுவதும் உலா வருகிறது. இதற்கு பெரும்பாலும் செல்போன் அழைப்பையே பயன்படுத்துகிறார்கள்.
முசிறி பார்வதிபுரத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு ஒரு போன்கால் வந்துள்ளது. அந்த போனில் பேசிய நபர் தான் கர்நாடகா மாநிலம் ஹூப்ளி என்ற இடத்திலிருந்து பேசுவதாகவும், அவர் வசிக்கும் வீட்டின் அருகே வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டியபோது செப்பு குடத்தில் தங்க காசுகள் நிறைய கிடைத்ததாகவும் அவற்றை குறைந்த விலைக்கு தருவதாகவும் கூறியுள்ளார்.

அதனை நம்பாத முசிறியை சேர்ந்த நபர் அவரிடம் தொடர்ந்து பேசியதில் ஒரு கிலோ எடையுள்ள தங்க காசுகளை ரூ.10 லட்சத்திற்கு தருவதாகவும், முதலில் நேரில் வந்து மாதிரிக்கு இலவசமாக தரும் தங்க காசுகளை பெற்று செல்லுமாறும் கூறியுள்ளார். வங்கி மேலாளர் எனக்கூறி போனில் ஏடிஎம் கார்டு எண்ணை கேட்டு வங்கி கணக்கில் இருந்து திருடும் மோசடி கும்பல் தற்போது தங்கம் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஈடுபட உள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.
இது குறித்து முசிறி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா கூறுகையில், குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக மோசடி கும்பல் போன் மூலம் அழைக்கும் தகவலை நம்பி யாரும் செல்லக் கூடாது. மாதிரிக்கு தங்க காசு முதலில் கொடுத்துவிட்டு பின்னர் லட்சக்கணக்கில் பணம் கொண்டுவரச் செய்து பணத்தை பறித்துக்கொண்டு துரத்தி விட வாய்ப்புள்ளது. அல்லது மாதிரி தங்க காசு வாங்கிட அறிமுகம் இல்லாத இடத்திற்கு செல்லும்போது, சென்ற நபரை பிடித்து ரகசிய இடத்தில் அடைத்து வைத்து கொண்டு குடும்பத்தினரிடம் பணம் கேட்டு மிரட்டவும் வாய்ப்புள்ளது.
எனவே மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என கூறினார். முசிறியை சேர்ந்த நபர் இது குறித்து முழு விபரத்தையும் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். சைபர் கிரைம் போலீசார் பொதுமக்கள் ஏமாறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது இதே போன்ற மோசடி கும்பல் பல்வேறு வகையில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.