நெல்லை அருகே முகப்புத்தகம் மூலம் அறிமுகமான நபர் காதலிப்பதாக கூறி நேரில் வரவைத்து இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
நெல்லை அருகே பேட்டை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கம்யூட்டர் சென்டர் ஒன்றில் பயின்று வருகிறார். அவருக்கு முகப்புத்தகம் எனப்படும் பேஸ்புக்கில் அறிமுகமாகியுள்ளான் மேலச்செவல் அருகே உள்ள வாணியங்குளத்தை சேர்ந்த ஜேசிபி ஆப்ரேட்டரான சுந்தர். சுமார் 6 மாதமாக முகப்புத்தகம் வாயிலாக பேசிவந்த சுந்தர் அதனை தொடர்ந்து அந்த பெண்ணிடம் வாட்ஸப்பிலும் பேசியுள்ளான். அதனை அடுத்து அந்த பெண்ணை காதல் வலையில் வீழ்த்தியுள்ளான் சுந்தர்.
அதனையடுத்து வியாழக்கிழமையான நேற்று கம்யூட்டர் சென்டருக்கு சென்ற அந்த மாணவி மாலை வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய பெற்றோர்களும், உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நாங்குநேரி அருகே சின்னமூலக்கரை அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஒரு இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அந்த விசாரணையில் கம்பியூட்டர் சென்டரில் காணாமல் பெண்தான் சடலமாக கிடக்கிறார் என போலீசார் உறுதி செய்தனர்.
மேலும் நடந்த விசாரணையில் இளம்பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றிய சுந்தர் அவரை நேரில் வரவைத்து காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று நண்பர்களுடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதை எங்கே வெளியே சொல்லி தன்னை சிக்கவைத்துவிடுவாளோ என எண்ணி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான்.இந்த கொடூர சம்பவத்தில் சம்பந்தமுள்ள சுந்தர் மற்றும் அவனது நண்பர்கள் போலீசாரால் தேடப்பட்டு வருகின்றனர்.
பேஸ்புக், வாட்சப் மூலம் பழகி காதலிப்பதாக ஏமாற்றி இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.