





கர்நாடக சங்கீத உலகின் மும்மூர்த்திகளில் ஒருவராக புகழ்பெற்றவர் ஐயன் முத்துஸ்வாமி தீட்சிதர். தெய்வீகமும், இசையும் இரண்டற கலந்து 72 மேளகர்த்தா ராகங்களிலும் கீர்த்தனைகளையும் இயற்றி, இசை உலகில் தன்னிகரற்று கோலோச்சி 64வது நாயன்மார், 13வது ஆழ்வார் உள்ளிட்ட புகழுக்குச் சொந்தக்காரராக ஐயன் முத்துஸ்வாமி தீட்சிதர் திகழ்கிறார்.
இவரின் 250ஆம் ஆண்டு ஜெயந்தி விழா, எட்டயபுரம் சமஸ்தானம் சார்பில் அதன் அரண்மனை மைதானத்தில் கோலாகலமாக கீர்த்தனை நிகழ்ச்சிகளோடு இனிதே கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கர்நாடக சங்கீத கலைஞர் கலைமாமணி நித்யஸ்ரீ மகாதேவன், தனது கீர்த்தனையை அரங்கேற்றம் செய்தார். ஸ்ரீ இசைப் பள்ளியினர் கீர்த்தனைகள் இசைத்து இசை அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பின்னணி பாடகர்கள் சத்ய பிரகாஷ், பூஜா வைத்தியநாதன் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில், புதுக்கோட்டை ராணியார் சாருபாலா ஆர். தொண்டைமான், கள்ளிப்பட்டி ஜமீன் காகுத் கார்த்திகேயன், ராஜா ரவிவர்மா வழிப் பெயரன் கிளிமனூர் ராஜா ராமவர்ம தம்புரான், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் ஐ.ஏ.எஸ், மாவட்ட முதன்மை நீதிபதி ஆர். வசந்தி, மகாகவி பாரதியாரின் பேரன் நிரஞ்சன் பாரதி உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள், பொதுமக்கள் என 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று முத்துஸ்வாமி தீட்சிதருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் இரவு விருந்து எட்டயபுரம் சமஸ்தானம் சார்பில் பரிமாறப்பட்டது.