Skip to main content

ராகுல்காந்தியை முன்னிறுத்துவது தான் மதசார்பற்ற சக்திகளின் ஒருங்கிணைப்புக்கு ஏற்றதாக இருக்கும் -ஸ்டாலின் 

Published on 18/12/2018 | Edited on 18/12/2018
ச்

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடல்:
 

’’தென்திசை நோக்கி இந்தியாவின் திருமுகத்தைப் பல முறை திரும்பிடச் செய்த அரசியல் பேராளுமையாம் தலைவர் கலைஞர் , மறைந்து 125 நாட்கள் கடந்த நிலையிலும், தன் திருவுருவச் சிலை திறப்பு விழாவின் வாயிலாக இந்திய அரசியலின் ஒட்டுமொத்தப் பார்வையையும் தமிழ்நாட்டை நோக்கித் திருப்பிவிட்டார். 16-12-2018 என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக அமைந்துவிட்டது. தலைவர் கலைஞர் பார்த்துப் பார்த்து உருவாக்கிய அண்ணா அறிவாலயத்தில், அவர் திறந்து வைத்த பேரறிஞர் அண்ணா சிலைக்குப் பக்கத்திலேயே தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலையை கழக பொதுச் செயலாளர் இனமான பேராசிரியர் முன்னிலையில் இந்திய தேசிய காங்கிரசின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் அன்னை சோனியா காந்தி அம்மையார் அவர்கள் திறந்து வைத்தார்கள். அண்மைக் காலமாக அதிகளவு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தபோதும், தன் தந்தையைப் போலக் கருதும் தலைவர் கலைஞரின் சிலை திறப்பு விழா என்றதும் ஆர்வத்துடன் ஒப்புக் கொண்டு, அக்கறையுடன் கலந்து கொண்டு, அன்பு தவழ சிலையைத் திறந்து வைத்த அம்மையார் அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.

 

சிலை திறப்பு விழா நிகழ்வுக்குத் திட்டமிடும்போது, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அருமைச் சகோதரர் ராகுல்காந்தி அவர்களுக்கு வேறு பணிகள் நிறைந்திருந்தன. எனினும், தலைவர் கலைஞர் அவர்களின் மீது அவருக்கு இயல்பாகவே உள்ள பாச உணர்வால், அழைப்பிதழில் பெயர் இடம் பெற இயலாத நிலையிலும் கூட, ஒரு மாபெரும் கட்சியின் தலைவரான அவர் நேரில் வந்து கலந்துகொண்டு, இளந்தலைவரான தனக்கு, தலைவர் கலைஞரின் அரசியல் எளிமை எந்தளவுக்கு வழிகாட்டுகிறது என்பதைத் தனது உரையில் வெளிப்படுத்திய உள்ளப்பாங்கிற்கு பெரிதும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் மதச்சார்பின்மையும் - மாநில உரிமைகளும் காக்கப்பட வேண்டும் என்கிற அக்கறையுடன் தேசிய அளவிலான ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்கும் பெரும்பணியை மேற்கொண்டிருக்கும் ஆந்திர முதல்வர்  சந்திரபாபு நாயுடு அவர்கள் இந்த இனிய விழாவில் பங்கேற்று தலைவர் கலைஞர் அவர்களின் சிறப்புகளை எடுத்துக் கூறியமைக்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். அதுபோலவே, பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த கேரள மாநில முதல்வர்  பினராயி விஜயன்  இந்நிகழ்வில் பங்கேற்று தலைவர் கலைஞருக்குள் இருந்த கம்யூனிச சிந்தனையை எடுத்துக் காட்டும் வகையில் அவர் ஆற்றிய சாதனைகள், நடத்திய போராட்டங்கள் ஆகியவற்றைத் தொகுத்து வழங்கிய உரைக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு நாராயணசாமி அவர்கள் தலைவர் கலைஞர் மேல் உள்ள பற்றினைத் தனது அரசின் அறிவிப்புகள் மூலமாகவே நிலைநாட்டியவர். அவர் இந்த இனிய விழாவில் பங்கேற்று தலைவர் கலைஞருக்கு செலுத்திய புகழாஞ்சலிக்கும் என் உளமார்ந்த நன்றி. கழகத்தின் பொருளாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் மிகச் சிறப்பான வரவேற்புரையை நிகழ்த்தி, இந்திய அளவில் கலைஞரும் கழகமும் எத்தகைய முக்கியத்துவமான மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது என்பதை உணர்த்தினார். அவருடைய உரைக்கும் உணர்வுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

 

தலைவர் கலைஞர் மீது எப்போதும் மாறாத பற்றுக் கொண்ட தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களான திராவிட கழகத் தலைவரும், தமிழர் தலைவருமான ஐயா ஆசிரியர் அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சகோதரர் திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம்,  முகுல் வாசினிக் எம்.பி, தெலுங்கு தேச நாடாளுமன்ற உறுப்பினர்  சி.எம்.ரமேஷ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அண்ணன் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்திய தலைவர் பேராசிரியர் ஐயா காதர் மொய்தின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் தொல்.திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் சகோதரர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தோழமை கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், சோனியா அம்மையாரின் பேச்சினை மொழிபெயர்த்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் பிரமுகர்களும் நன்றிக்குரியவர்கள். திரைத்துறை சார்ந்த சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த், கவிப்பேரரசு வைரமுத்து, இளைய திலகம் பிரபு, நடிகர்கள் நாசர், வடிவேலு, விவேக், மயில்சாமி, திரைப்பட நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு, குட்டி பத்மினி உள்ளிட்ட விழாவில் பங்குபெற்ற திரைத்துறையினர் அனைவருக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தித் திரையுலகின் திறமைமிக்க நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சத்ருகன் சின்கா , நமது தலைவர் கலைஞர் மீது கொண்டுள்ள பற்றினால் இந்த விழாவுக்கு வருகை தந்தமைக்கு சிறப்பு நன்றி.

 

தலைவர் கலைஞர் அவர்களின் நிர்வாகத்திறன் - இலக்கியத் திறன் இவற்றால் ஈர்க்கப்பட்ட கல்வியாளர்கள், நீதியரசர்கள், டாக்டர்கள், தொழிலதிபர்கள், கவிஞர்கள், வழக்கறிஞர்கள் எனச் சான்றோர்கள் பலரும் நிறைந்திருந்த விழாவினைக் கண் குளிரக் காணும் வாய்ப்பு அமைந்தமைக்காக அத்தனை பேருக்கும் என் நன்றியினை உரித்தாக்குகிறேன். சிற்பி தீனதயாளனின் கைத்திறத்தால் உருவான கலைஞரின் திருவுருவச் சிலையினை வண்ண வண்ண விளக்குகள் அலங்காரத்துடன், செம்மொழியான தமிழ்மொழியாம் என்கிற முத்தமிழறிஞரின் பாடல் ஒலிக்கத் திறந்து வைத்தார் தமிழுக்குச் செம்மொழித் தகுதி தந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினை வழிநடத்திய அன்னை சோனியா அம்மையார் அவர்கள். தலைவர் கலைஞர் அவர்கள் கையசைத்து தன் உடன்பிறப்புகளை நோக்கி புன்னகை புரியும் அந்த உயிரோட்டமான முகத்துடன் சிலை அமைவதற்கு இரவும் பகலும் ஓடியாடி மேற்பார்வையிட்டவர் முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான எ.வ.வேலு அவர்கள். அவரது அயராத சிறப்பான பணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணா அறிவாலயத்தில் இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க விழா நடைபெற இருக்கிறது என்பதைக் கட்டியம் கூறும் வகையில், கடந்த வாரமே 114அடி உயரக் கொடிக்கம்பத்தினை நாட்டி, அதில் விண்ணைத்தொடும் வகையில் இருவண்ணக் கொடி அசைந்திடச் செய்வதில் முனைப்பு காட்டிய சென்னை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மா.சுப்ரமணியம் அவர்களுக்கும் நன்றி.

 

திருவுருவச் சிலைத் திறப்பு விழா நடந்த அண்ணா அறிவாலயத்தில் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்ததுடன், அந்த அண்ணா அறிவாலயத்தையே எடுத்து வந்து ஒய்.எம்.சி.ஏ. திடலில் வைத்தது போல எழில்மிகு மேடைத் தோற்றத்துடன், மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்வினை சிறப்புற ஏற்பாடு செய்த சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஜெ.அன்பழகன் அவர்களுக்கு எனது நன்றி. தலைவர் கலைஞர் அவர்களின் சிலையினைத் திறந்து வைத்த பிறகு, ஓய்வில்லா அந்தச் சூரியன் ஓய்வெடுக்கும் இடமான அண்ணா சதுக்கத்தில் உள்ள தலைவரின் நினைவிடத்திற்கு வந்து சோனியா அம்மையாரும் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள். அந்த நினைவிடத்தின் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு, பூக்களால் அதனை அலங்கரித்து, தமிழ் மணம் கமழச் செய்யும் பணியை இடைவிடாது மேற்கொள்பவரான சென்னை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் சேகர்பாபு அவர்களுக்கும் நன்றி. சிலை திறப்பு விழா சிறப்பாக அமைந்திடும் வகையில் டெல்லியில் உள்ள தலைவர்களையும் பிற மாநிலத் தலைவர்களையும் சென்னைக்கு அழைத்து வருவதிலும் ஒருங்கிணைப்பதிலும் முனைப்புடன் செயலாற்றிய முன்னாள் மத்திய அமைச்சரும், கழக முதன்மை செயலாளருமான டி.ஆர்.பாலு அவர்களுக்கும், கழகத்தின் நாடாளுமன்ற மாநிலங்களவைக் குழுத் தலைவரான சகோதரி கனிமொழி எம்.பி அவர்களுக்கும், மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா எம்.பி, ஆர்.எஸ்.பாரதி எம்.பி, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி உள்ளிட்டோருக்கும் என் நன்றியினை உரித்தாக்குகிறேன். தலைவர் சிலை  திறப்பு விழாவினை செம்மையாக நடத்திக் காட்டிட வேண்டும் என்பதில் எனக்கு உறுதுணையாக நின்ற துணைப் பொதுச் செயலாளர்கள், தலைமை நிலையச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் - அறிவாலய அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி செலுத்துகிறேன்.

 

எல்லாவற்றுக்கும் மேலாக, திருவுருவச் சிலை திறப்பு விழாவும் – அதன் தொடர்ச்சியாக நடந்த மாபெரும் பொதுக்கூட்டமும் பேரெழுச்சியுடனும் பெருங்கட்டுப்பாட்டுடனும் நடந்திட முழுமுதற் காரணமாக இருந்தவர்கள் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாம் கோடானுகோடி கழகத் தொண்டர்கள் தான். அறிவாலயத்தில் கூடிட வேண்டாம் - பொதுக்கூட்ட அரங்கில் அலை அலையாகத் திரளுங்கள் என உங்களில் ஒருவனான நான் விடுத்த அன்பு வேண்டுகோளை, கட்டளையாக ஏற்று, ராணுவச் சிப்பாய்கள் போல கட்டுப்பாடு காத்த உடன்பிறப்புகளுக்கு நன்றி.. நன்றி.. நன்றி.. இரண்டு நாட்களாகவே சென்னை மாநகரையும் கடலோர மாவட்டங்களையும் "பெய்ட்டி" புயல் மிரட்டிக் கொண்டிருந்த நிலையில், எப்போது மழை வருமோ, எவ்வளவு நேரம் வானம் பொழியுமோ என எல்லோருமே மனதளவில் தயங்கி இருந்த சூழலில், எத்தனையோ அரசியல் புயல்களை எதிர்கொண்டு கழகத்தைக் காத்தவரான தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலை திறப்பு விழா நாளில் புயல் – மழையையும் கூட சற்று ஒதுங்கி இருக்கச் செய்த இயற்கை அன்னையின் கருணைக்கும் நன்றி. இத்தனை  பேர் ஒத்துழைப்புடன் நடந்த இனிய திருவிழாவில் நம் உணர்வோடும் உயிரோடும் நிரந்தரமாகக் கலந்திருக்கின்ற தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், நன்றிப் பூக்களைத் தூவி வணங்குகிறேன்.

 

அறிவாலயத்தின் வாயிலில் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் சிலையாக நிற்பது மாலை அணிவித்து, மலர் தூவி வணங்குவதற்காக மட்டுமல்ல, தந்தை பெரியார் வழி நின்று அவர்கள் உருவாக்கிய கழகத்தை, அதன் கொள்கைகளை எந்நாளும் கட்டிக்காத்திட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டும் வகையிலே தான் இருவரின் சிலைகளும் அருகருகே அமைந்துள்ளன. அந்தச் சிலைகளைக் காணும்தோறும் கழகமும் அதன் கொள்கைகளும் நம் நெஞ்சில் விளைந்திட வேண்டும்; விழிப்புற்றிட வேண்டும்.

 

எப்போது எதைச் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து அப்போது அதனைக் கச்சிதமாகச் செய்வதில் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் நமது தலைவர் கலைஞர் அவர்கள். அவர் சிலையாக மட்டுமல்ல, நம் சிந்தனையிலும் நிறைந்திருப்பதால் தான், உங்களில் ஒருவனான நான் அந்த சிலை திறப்பு விழா மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிடும் போது, மத்தியிலே நடைபெறும் "சேடிஸ்ட் மோடி" தலைமையிலான  பாசிச - நாசிச ஆட்சியை வீழ்த்திட ராகுல் காந்தி அவர்களை முன்னிறுத்தி, அவரது கரங்களை வலுப்படுத்துவோம் என்பதைப் பிரகடனப்படுத்தினேன்.

 

இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைத்து – மதநல்லிணக்கத்தைச் சிதைத்து - பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் தகர்த்துக் கொண்டிருப்பதுடன், தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக வஞ்சிக்கும் மோடி அரசை வீழ்த்திட வேண்டுமென்றால் அதற்குரிய வலிமை கொண்டவரும், பா.ஜ.க.வின் கோட்டையாக இருந்த மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமையக் காரணமாக அமைந்தவருமான ராகுல்காந்தி அவர்களை முன்னிறுத்துவது தான் மதசார்பற்ற சக்திகளின் ஒருங்கிணைப்புக்கு ஏற்றதாக இருக்கும் என்ற அடிப்படையிலே உரக்கச் சொன்னேன்.’’
 
 

சார்ந்த செய்திகள்