உத்தரப் பிரதேச மாநிலம், பரேலி பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், கடந்த 2019ஆம் ஆண்டு, இளைஞர் ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், தன்னை அந்த இளைஞர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறியுள்ளார். அந்தப் புகாரின் பேரில், போலீசார், அந்த இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அது தொடர்பான வழக்கில், அந்த இளைஞருக்கு நான்கரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்கிடையே, அந்த இளைஞர் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தொடர்ந்தார். அந்த மேல்முறையீட்டு மனுவில், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அந்தப் பெண்ணிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், அந்தப் பெண் சாட்சியங்களை முன்பு கூறியதை விட மாற்றி மாற்றி கூறியுள்ளார். இதில் சந்தேகமடைந்த நீதிமன்றம், அந்தப் பெண்ணிடம் குறுக்கு விசாரணை நடத்தியது. தொடர் விசாரணையில், தான் சொன்ன புகார் பொய் என அவர் ஒப்புக்கொண்டார். மேலும், அந்த இளைஞரை பழி வாங்குவதற்காகவே இப்படி பொய்யாக புகார் அளித்தேன் எனவும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, பொய்யாக புகார் அளித்த அந்தப் பெண்னை, நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அந்த 25 வயது இளைஞர் சிறையில் இருந்த அதே நான்கு ஆண்டுகள், எட்டு மாதங்கள் மற்றும் ஆறு நாட்கள் சிறைத் தண்டனையை அந்தப் பெண்ணுக்கு நீதிமன்றம் வழங்கியது. மேலும், அந்தப் பெண்ணுக்கு ரூ.5.88 லட்சம் அபராதம் விதித்ததுடன் அதைச் செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்ற விதியுடன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. இந்தத் தொகையை, வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற இளைஞருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.