
நாகப்பட்டினம் அருகே மீன் இறங்குதளம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நாகப்பட்டினம் மாவட்டம், சின்னமேடு, கூழையாறு கிராமங்கள் கடல் அரிப்பினால் மிகவும் பாதிப்படைந்துள்ளதால், அங்கு கடல் அரிப்புத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; கொடியம்பாளையம் கிராமத்தில் மீனவ மக்களின் உபயோகத்திற்கு ஏலக்கூடம் மற்றும் வலைப்பின்னும் கூடம் அமைக்க வேண்டும் என்ற இப்பகுதி மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளின் அடிப்படையில் தமிழக முதல்வர் 2020- 21 ஆம் நிதியாண்டில் விதி எண் 110-ன் கீழ் நாகப்பட்டினம் மாவட்டம், சின்னமேடு கிராமத்தில் ரூபாய் 9.78 கோடி செலவிலும், கூழையாறு கிராமத்தில் ரூபாய் 6.83 கோடி செலவிலும் கடல் அரிப்புத் தடுப்பு பணி மேற்கொள்ளப்படும் எனவும், கொடியம்பாளையம் கிராமத்தில் ரூபாய் 2.85 கோடி செலவில் மீன் ஏலக்கூடம் மற்றும் வலைப்பின்னும் கூடம் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்கள். தற்போது, தமிழக அரசால் இப்பணிகளுக்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் விரைவில் துவங்கும் நிலையிலுள்ளன.
இப்பணிகள் நிறைவேற்றப்படுவதால் சின்னமேடு, கூழையாறு ஆகிய கடலோர கிராமங்கள் கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்கப்படும். கொடியம்பாளையம் கிராமத்தில் மீன் ஏலக்கூடம் மற்றும் வலைப்பின்னும் கூடம் கட்டப்படுவதால் அக்கிராம மீனவர்கள் பெரிதும் பயனடைவர்". இவ்வாறு அமைச்சர் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.