Skip to main content

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு; குற்றப்பத்திரிகை தாக்கல்

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
front of Governor's House incident Filing of charge sheet

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத், கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், ஆளுநர் மாளிகையும் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், கருக்கா வினோத் ஏற்கனவே தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றதும், ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வெடிபொருள் தடைச்சட்டம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாலும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள காரணத்தினாலும் சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவின் பேரில், ரவுடி கருக்கா வினோத்தை குண்டாஸ் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத் மீது மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் தேசிய புலனாய்வு முகமை (NIA - என்.ஐ.ஏ.) 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தது.

front of Governor's House incident Filing of charge sheet

இந்நிலையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தேசிய புலானாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் தாக்கல் செய்துள்ளது. 680 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் ஆளுநர் மாளிகை வலியுறுத்தியபடி இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124ஐ என்.ஐ.ஏ. சேர்த்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124 என்பது குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரை தாக்குதல் அல்லது தாக்க முற்படுவதாகும். ஏற்கெனவே கருக்கா வினோத் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், தற்போது மேலும் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்