தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கின் அடுத்தக் கட்டமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதால் தாமதம் ஆகும் என்ற பயம் உள்ளது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
வெள்ளையர் ஆட்சிகாலத்தில் சிவகங்கை சமஸ்தானத்தில் முதல் சுதந்திர பிரகடனத்தை வெளியிட்ட மருது சகோதரர்கள் என போற்றப்படும் மருதுபாண்டியர்களான பெரியமருதுவும், சின்னமருதுவும் வெள்ளையர்களால் 24-10-1801 தூக்கிலிடப்பட்டனர். அவர்களின் சமாதி சிவகங்கை மாவட்டம், காளையார் கோயிலில் உள்ள காளீஸ்வரர் கோயிலின் சன்னதி எதிர்புறம் உள்ளது. அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 27 ம் நாள் மருதுபாண்டியர்களுக்கு குருபூஜை விழாவாக கடைபிடிக்கப்படுகிறது. மாமன்னர்கள் மருதுபாண்டியரின் 217வது நினைவுநாள் விழா இன்று நடைபெறுவதையொட்டி முக்கியபிரமுகர்களும், அரசியல் கட்சித்தலைவர்களும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். இந்நிலையில், இரண்டாவது வருடமாக அஞ்சலி செலுத்த வந்தார் அ.ம.மு.க.வின் துணைப் பொது செயலாளரான தினகரன்.
மருதிருவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தவர், " 18 எம்எல்ஏ –க்கள் தகுதி நீக்க வழக்கில், உயர்நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றத்தை தந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதால் தாமதம் ஆகும் என்ற பயம் உள்ளது. எனவே மேல்முறையீடு செய்வது குறித்து மக்களை சந்தித்த பின் முடிவு செய்யப்படும். இதற்காக 18 எம்.எல்.ஏக்களும் தங்கள் தொகுதிக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளதாகவும், மேலும் கால தாமதப் படுத்த பல தீய சக்திகள் எங்களை மேல்முறையீடு செய்ய வைக்க முயற்சிக்கின்றனர். அதே வேளையில், சட்டமன்ற தேர்தலை சந்திக்கலாம் என்ற எண்ணம் பலரிடம் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் தமிழக அரசியலில் அடுத்தக் கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.