தமிழ்நாட்டில் கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், செப். 1ஆம் தேதி முதல் 9,10,11,12 வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துவந்த நிலையில், தற்பொழுது பள்ளி திறப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
செப். 1ஆம் தேதி பள்ளிகளை 50 சதவீத மாணவர்களுடன் திறந்தால் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி, கரோனா பரவலைத் தடுக்க 6 அடி இடைவெளியியில் மாணவர்களை அமரவைக்க வேண்டும். மாணவர்கள் கைகழுவும் வசதி, உடல்வெப்பநிலையைக் கணக்கிடும் கருவி ஆகியவை பள்ளியில் இருத்தல் வேண்டும். இதமான சூழல் இருந்தால் மாணவர்களைப் பள்ளி வளாகத்தில் அமரவைத்து பாடம் நடத்தலாம். பள்ளி வளாகத்தில் எச்சில் துப்புவதை தடுக்க வேண்டும். முதல் நாள் 50 சதவீதம் மாணவர்கள் வந்தால், அடுத்தநாள் மீதமுள்ள 50 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பன போன்ற நடைமுறைகளைக் கடந்த 18 ஆம் தேதி தமிழ்நாடு மருத்துவத்துறை வெளியிட்டது.
இந்நிலையில் நாளை மறுநாள் செப். 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்தில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளி, அரசு கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள், பஸ் பாஸ் இல்லையென்றாலும் சீருடை, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காட்டி இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறையின் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் வரும் செப்.15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் ஞாயிற்று கிழமைகளில் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்காக பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.