Skip to main content

பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் ஃபோன்கள்! சென்னை மாநகராட்சி அதிரடி!

Published on 29/05/2020 | Edited on 29/05/2020

 

Free smart phones for school children - Corporation of Chennai


கரோனா தாக்கத்தால் பொது முடக்கம் அமலில் இருக்கும் சூழலில், இந்த ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டே வருகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகளின் நலன் கருதி, இந்தாண்டு ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இணையத்தளம் மூலம் வகுப்புகள் நடத்த முகமாக, சென்னையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 6,000 ஸ்மார்ட் போன்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
 


கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து வகையான கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு்ள்ளது. 
 

ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் வரும் கல்வியாண்டு எப்போது தொடங்கும் என்று தெரியாத நிலை இருக்கிறது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
 

அதனடிப்படையில் ஒன்பதாம் வகுப்பு முடித்து பத்தாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கும், பதினொன்றாம் வகுப்பு முடித்து பன்னிரண்டாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் நடத்த சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்து வருகிறது.
 


இந்த நிலையில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க பெரும்பாலான மாணவர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லாததால், சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் 6 ஆயிரம் ஸ்மார்ட் போன்களை இலவசமாக மாணவர்களுக்கு வழங்கியுள்ளது சென்னை மாநகராட்சி.
 

இந்த ஸ்மார்ட் போன் உதவியுடன் மாணவர்கள் இணையத்தளம் வாயிலாகப் பள்ளி ஆசிரியர்களிடம் நேரலையில் பாடங்களைக் கற்கலாம். 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே அரசு சார்பில் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு அதன் மூலம் வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 

http://onelink.to/nknapp


ஜூன் 1-ஆம் தேதி முதல் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்க உள்ளதாகவும், ஒரு மாதத்திற்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்திட திட்டம் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச ஸ்மார்ட் ஃபோன்கள், இலவச மடிக்கணினி உதவியுடன் ஜூம் செயலி மற்றும் கல்விக்காக உருவாக்கப்பட்டு்ள்ள செயலிகள் உதவியுடனும் இந்த வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

 

 

 

சார்ந்த செய்திகள்