தமிழக ஆளுநர் தரும் தமிழ் புத்தாண்டு தேநீர் விருந்தில் பங்கேற்கப் போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மேலானதொரு அதிகார மையமாக செயல்பட ஆளுநர் தரப்பு நடவடிக்கை எடுத்து வருவதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் நலனுக்கு எதிராகவே ஆளுநர் செயல்பட்டு வருவதால், அவருடனான தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் உணர்வை அவமதிக்கும் வகையில் செயல்படும் ஆளுநர், தமிழ்ப் புத்தாண்டு தேநீர் விருந்துக்கு அழைப்பது தமிழக தலைவர்களை கேலி செய்வதாக உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட காரணங்களுக்காக ஆளுநரின் அழைப்பை ஏற்கவில்லை என மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்பது தொடர்பாக, தி.மு.க. என்ன முடிவு எடுக்கிறதோ, அதனையொட்டியே தங்கள் முடிவு இருக்கும் என காங்கிரஸ் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சிகள் தெரிவித்துள்ளனர்.