தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது வண்ணாரப்பேட்டை 49 ஆவது வார்டில் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரை தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தேர்தல் முறைகேடுகளை தடுக்கக்கோரி ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் இன்று காலை மீண்டும் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். இரண்டாவதாக கைது செய்யப்பட்ட இந்த வழக்கில் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அவரை மார்ச் 9ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.