கடந்த 1991- 1996 வரை சின்னசேலம் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் பரமசிவம். அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரை அடுத்து 1998- ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதைத் தொடர்ந்து. இந்த வழக்கு தொடர்பான விசாரணை முதலில் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்திலும், பின்னர் சென்னையில் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது. அதன் தொடர்ச்சியாக, இவ்வழக்கு மீண்டும் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மாவட்ட நீதிமன்ற நீதிபதி இளவழகன் இன்று (29/03/2021) தீர்ப்பை வழங்கினார். தீர்ப்பில், 'முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்துக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 33 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகை செலுத்தவில்லையென்றால் அவருக்கு மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் பரமசிவம் தனது மகன்கள் பேரில் வாங்கியுள்ள சொத்துகள் முழுவதும் அரசுடைமையாக்கப்படும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.