தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்க உள்ளது.
ரயில் பயணிகள் வசதிக்காக ரயில்வே வாரிய விதிப்படி பயணம் செய்ய உள்ள தேதியில் இருந்து 120 நாட்களுக்கு முன்பாக ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது இன்று (ஜூலை 12) முதல் தொடங்கவுள்ளது. காலை 8 மணி முதல் ரயில் நிலைய கவுண்ட்டர்கள், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நவம்பர் 9 ஆம் தேதி பயணிப்பதற்கு இன்று முதலும், அதே போல் நவம்பர் 10 ஆம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 13 ஆம் தேதியும், நவம்பர் 11 ஆம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 14 ஆம் தேதியும், நவம்பர் 12 ஆம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 15 ஆம் தேதியும் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடைசி நேர இட நெருக்கடியைத் தவிர்க்க பயணிகள் விரைந்து ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ள ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முக்கிய ரயில் நிலையங்களில் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்குக் கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.