கணவர் இறந்து இரண்டாவது மாதத்திலேயே கைம்பெண்ணான மருமகளையும் பேரக்குழந்தைகளையும் மாமனார், மாமியார் வீட்டைவிட்டுத் துரத்தியடித்துள்ள துயரச் சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் நடந்துள்ளது.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு வருகின்ற 19-ஆம் தேதி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாவும் அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கச்சேரி வீதியில் வசித்து வந்த கண்ணன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். தலித் வகுப்பைச் சேர்ந்த இவருக்கு நிசாலினி(30) என்ற மனைவியும் கதிரவன்(10), அபிராமி(2) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இறந்த கண்ணனின் உடல் அவர்களின் பூர்வீக கிராமமான காட்டாத்தி உஞ்சவிடுதியில் அடக்கம் செய்யப்பட்டது. கிராம வழக்கப்படி துக்க நாள் காரியம் முடியும்வரை இறந்த உடல் வைக்கப்பட்டிருந்த வீட்டில் இருந்தாக வேண்டும் என்பதால் நிசாலினியும் குழந்தைகளும் காட்டாத்தியிலேயே இருந்துள்ளனர்.
காரியங்கள் முடிந்து இவர்கள் வசித்த கறம்பக்குடி வீட்டுக்கு வரும்போது கண்ணனின் தந்தை இளவரசன் பல்வேறு விதங்களில் துன்புறுத்தியுள்ளர். நாங்கள் வாழ்ந்த வீட்டில் வசிக்காமல் வேறு எங்கு செல்வது எனக்கூறிவிட்டு அந்த வீட்டிலேயே நிசாலினி குழந்தைகளுடன் தங்கியுள்ளானர். ஆனால், இவர்களை துரத்திவிட்டு அந்த வீட்டை வேறு நபருக்கு விற்பனை செய்வது என முடிவெடுத்துள்ளார் இளவரசன். இந்நிலையில், சனிக்கிழமையன்று நிசாலினி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றிருந்த நேரம் பார்த்து ஆலங்குடி காவல்துணைக் கண்காணிப்பாளர் உதவியுடன் பூட்டை உடைத்துவிட்டு மாமனார் இளவரசனும், மாமியார் மனைவி வளர்மதியும் வீட்டுக்குள் குடியேறியுள்ளனர்.
மேலும், நிசாலினி தன்னை அடியாட்கள் வைத்து தாக்க முற்பட்டதாக காவல்நிலையத்தில் புகார்மனுவையும் கொடுத்துள்ளார்.
இரவு வீடுதிரும்பிய நிசாலினிக்கு இந்த தகவல் தெரிய வந்தது. அந்த வீட்டில் மாடியில் ஒரு வீடு இருந்தும் கூட அவர்களை தங்குவதற்கு அனுமதிக்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி உதவியுடன் கறம்பக்குடி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், கறம்பக்குடி காவல் நிலையத்திலேயே நிசாலினி மற்றும் குழந்தைகளுடன் காத்திருக்கும் போராட்டத்தை சனிக் கிழமையன்று இரவு நடத்தினர்.
இளவரசனும் வளர்மதியும் வீட்டுக்குளேயே தாழ்பாள்போட்டு தங்கியுள்ளதால். அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உறவினர்களும், கட்சியினரும் எவ்வளவோ முயன்றும் அவர்கள் கதவை திறக்கவே இல்லை. இதனால், வேறு வழியின்றி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் நிசாலினி குழந்தைகளுடன் வீட்டுமுன் உள்ள வராண்டாவலேயே தங்கியுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி,நாகராஜன், எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர்கள் எம்.உடையப்பன், எஸ்.பொன்னுச்சாமி, ஏ.ஸ்ரீதர், வி.துரைச்சந்திரன், ஒன்றியச் செயலாளர் த.அன்பழகன் உள்ளிட்டோர் நிசாலினி மற்றும் குழந்தைகளைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
செய்தியாளர்களைச் சந்தித்தும் நிலைமையை விளக்கினர். பிறகு, நிசாலினியுடன் கறம்பக்குடி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் மனுவும் அளித்தனர். ஆனால், முதலில் மனுவை வாங்க போலீசார் மறுத்துள்ளனர். கட்சித் தலைவர்கள் கட்டாயப்படுத்திய பிறகே மனுவை கறம்பக்குடி காவல் ஆய்வாளர் பெற்றுக்கொண்டுள்ளார்.
எனவே, மாமனாரும், மாமியாரும் சேர்ந்து கொடுமைப்படுத்தியதற்காக குடும்ப வன்முறைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விரோதமாக பூட்டை உடைத்து மாமனார், மாமியார் குடியேறுவதற்கு உதவிய ஆலங்குடி காவல் துணைக்கண்கானிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிசாலினி மற்றும் அவரது குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மேற்படி வீட்டிலேயே இவர்கள் வசிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்ற 19-ஆம்தேதி கறம்பக்குடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்போவதாக ஐ.வி.நாகராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.