ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் விதிகளுக்கு முரணாக கொண்டுவரபட்டுள்ள பாஸ்டேக் முறையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் நோக்குடன் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் முடிவின்படி பாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகள் அனைத்தும் பாஸ்டேக் முறைக்கு மாற்றப்படும் என்றும், அந்த முறைக்கான ரேடியோ அலைவரிசை அடையாள அட்டையைப் பெறாத வாகனங்கள் இரு மடங்கு கட்டணத்தை செலுத்தினால்தான் சுங்கச்சாவடியை கடக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஸ்டேக் கட்டண முறைக்கான அறிவிப்பாணைகளை ரத்து செய்யக்கோரி சென்னை தி.நகரை சேர்ந்த வழக்கறிஞர் கபிலன் மனோகரன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். பாஸ்டேக் அட்டை பெற்று வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த தனது காருக்கு ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், அது தொடர்பாக பாஸ்டேக் மற்றும் ஏர்டெல் பேமெண்ட் ஆகியவற்றில் புகார் அளித்தும் உடனடி நடவடிக்கை இல்லை எனவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். பாஸ்டேக் இல்லாவிட்டால் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்பது மறைமுகமாக பாஸ்டேக்கிற்கு மாற்றும் நடவடிக்கை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
பாதுகாப்பான, நம்பிக்கையான பணப்பரிமாற்றம் தொடர்பாக ரிசர்வ் வங்கி விதிகளின்படி குறுஞ்செய்தி மூலம் ஓ.டி.பி. எண்ணோ, ரகசிய குறியீட்டு எண்ணோ அனுப்பிய பின்னர்தான் பணப்பரிமாற்றம் செய்ய வேண்டும் என வகுக்கப்பட்டுள்ளதை மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இதுபோன்ற பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் கணக்கிலிருந்து நேரடியாக பாஸ்டேக் கணக்கிற்கு மாற்ற வகை செய்யும் மத்திய அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.