விவசாயிகளின் பயிர் கடனை 4 சதவீதத்திலிருந்து 9.6 சதவீதமாக மத்திய அரசு மாற்றியிருக்கிறது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடலூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காட்டுமன்னார்கோவில் அருகே சிலை வைத்து வழிபட முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து அக்கூட்டமைப்பு சார்பில், இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயிகளுக்கு எந்த சலுகையும் கொடுக்கவில்லை. ஆனால், இங்கிருக்கின்ற பெரும் பணக்கார முதலாளிகளுக்கு ஆதரவாக பல்வேறு கடன் தள்ளுபடிகளையும், வட்டி சலுகைகளையும் வாரி வழங்கினார்கள்.
விவசாயிகளுக்கு 4% வட்டியில் வழங்கிவந்த பயிர் கடனை, 9.6% என உயர்த்தியுள்ளதை நாடறியும்; நாட்டு மக்களும் அறிவார்கள். கரோனா காலத்திலும், உலகத்திற்கே உணவளித்த விவசாயிகளுக்கு எதையும் செய்யாமல் விட்டதோடு, பயிர் கடனுக்கான வட்டி சலுகையைக்கூட அளிக்காமல் இருப்பதையொட்டி காட்டுமன்னார்கோவில் வட்டம் கண்டமங்கலம் கிராமத்தில், வருகிற 09.11.2020 ஆம் நாள் திங்கள் கிழமை காலை 10.30 மணிக்கு மேல் 12.00 மணிக்குள் மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சிலை அமைத்து வழிபாடு நடத்த இருக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.