கரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பல தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் விவசாயிகள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய, மாநில அரசுகளே வெட்டிப் பேச்சு கதைக்கு உதவாது, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் வாழ வழி செய்ய வேண்டும் என்ற முழக்கத்துடன், தமிழக அரசு கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்திய அரசிடம் கேட்டுள்ள நிதியை உடனடியாக வழங்கிட வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிறு, குறு விவசாயிகளுக்கு தலா ரூ10,000 உடனே வழங்க வேண்டும். அனைத்து விவசாயக் கடன் வசூலை தள்ளி வைக்க வேண்டும்.
நூறு நாள் வேலைத் திட்டத்தை விவசாய பணிகளுக்கு பயன்படுத்திடவும், ஊரடங்கால் நாசமாகிப் போன வேளாண் விளை பொருட்களுக்கு உரிய இழப்பீடு, ஏழைக் குடும்பங்களுக்கு ரூபாய் 7,500 வழங்கிட வேண்டும்.
கரோனா நோய் தொற்று பாதிப்புள்ள பகுதிகளில் நோய் தொற்று பரிசோதனை செய்திட வேண்டும். மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்பட்ட குறுவை கோடை சாகுபடி கடந்த ஆண்டுகளை காட்டிலும் கூடுதலாக நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள மின்வெட்டால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மும்முனை மின்சாரம் இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்குவதன் மூலமாகதான் தற்போது பயிரிட்டுள்ள பயிர்களை காப்பாற்ற முடியும். தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விவசாயத்தை பாதுகாக்கும் பொருட்டு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரத்தை எவ்வித வெட்டும் இல்லாமல் வழங்கிட வேண்டும்.
கோடை சாகுபடிக்கு தேவையான யூரியா உள்ளிட்ட உரங்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது என அரசு தரப்பில் அறிவிப்பு இருந்தாலும், அவ்வப்போது செயற்கையாக தனியார் உரக்கடை தட்டுப்பாடுகளை உருவாக்கி கூடுதல் விலைக்கு அல்லது வேறு நுண்ணூட்ட உரங்களை வாங்குபவர்களுக்கு மட்டுமே யூரியா வழங்கமுடியும் என்ற நிலையும் உள்ளது.
எனவே உரத் தட்டுப்பாட்டை போக்குவதற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக போதுமான அளவு உரம் கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சனிக்கிழமை அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வீடுகளில், சமூக இடைவெளியை கடைப்பிடித்து கருப்புக் கொடி ஏந்தி தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.