இரண்டு நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார், இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி பிற்பகல் 2.06 மணிக்கு சூலூருக்கு வர இருக்கிறார். அங்கிருந்து பிற்பகல் 2.10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார். அதனைத் தொடர்ந்து பல்லடத்தில் 2.45 மணிக்கு மாதப்பூரில் நடைபெறும் பாஜக யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிற்பகல் 3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை செல்கிறார். மாலை 5.15 மணிக்கு சிறு குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்கத் திட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மாலை 6:45 மணிக்கு மதுரை பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை காலை 8.40க்கு மதுரையிலிருந்து தூத்துக்குடி புறப்படுகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை அவினாசி பாளையத்தில் விவசாயிகள் பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே ஈரோடு சென்னிமலை பகுதியில் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் பிரதமர் மோடி வருகையை எதிர்த்து கோஷங்களை எழுப்பியதால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி பாளையம் பகுதியில் அழகுமலை பிரிவு என்ற இடத்தில் தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் கருப்புக் கொடிகளை ஏந்தியும், கருப்பு பலூன்களை காட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2014 மற்றும் 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதனை நிறைவேற்றவில்லை என எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.