Skip to main content

“காவிரி பாசன மாவட்டங்களில் உரத் தட்டுப்பாட்டால் உழவர்கள் பாதிப்பு”  - அன்புமணி

Published on 09/11/2024 | Edited on 09/11/2024
 Farmers Affected by Fertilizer Scarcity in Cauvery Irrigated District says Anbumani

காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி வெற்றிகரமாக  அமைவதை உறுதி செய்ய தட்டுப்பாடின்றி  உரம் கிடைப்பதை  தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நெற்பயிர்களுக்குத் தேவையான யூரியா, பொட்டாஷ்  உள்ளிட்ட உரங்கள் கிடைக்காமல் உழவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நாட்டின்  முதன்மைத் தொழிலான  விவசாயத்திற்கு தேவையான உரங்கள் கூட தடையின்றி கிடைப்பதை தமிழக அரசால் உறுதி செய்ய முடியாதது கண்டிக்கத்தக்கது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நிலப்பரப்பில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. முன்கூட்டியே நடவு செய்யப்பட்ட பயிர்கள் குருத்து வெடிக்கும் நிலையில்  உள்ளன. தாமதமாக நடவு செய்யப்பட்ட பயிர்கள் இப்போது தான் செழித்து வளரத் தொடங்குகின்றன. இரு நிலையில் உள்ள பயிர்களுக்கும் யூரியாவும், பொட்டாஷும்  பெருமளவில் தேவை. ஆனால், காவிரி பாசன மாவட்டங்களில்  தனியார் கடைகளில் மட்டுமின்றி, கூட்டுறவு சங்கங்களில் கூட  அந்த உரங்கள் கிடைக்கவில்லை.

சில தனியார் கடைகளில் யூரியா உரம் கிடைத்தாலும் கூட, அவர்கள்  25% வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்கின்றனர். அதைக் கட்டுப்படுத்தவோ, பிற பொருட்களை வாங்க வேண்டும் என்று கட்டுப்படுத்தாமல்  அதிகபட்ச சில்லறை  விலைக்கு  தனியார் கடைகளில் உரம் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்யவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ்நாட்டில் உரத்திற்கு எந்த தட்டுப்பாடும் இல்லை, கூட்டுறவு சங்கங்களில் 32,755 டன் யூரியா, 13,373  டன் பொட்டாஷ், 16,792 டன் டி.ஏ.பி, 22,866 டன்  காம்ப்ளெக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக  கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். அந்த உரங்கள் எல்லாம் எங்கிருக்கின்றன என்பது தெரியவில்லை.  அமைச்சர் குறிப்பிடும் அளவுக்கு உரங்கள் இருப்பு இருந்தால் காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு நிலவுவது ஏன்? என்பதை அரசு விளக்க வேண்டும். காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி வெற்றிகரமாக அமைவதை உறுதி செய்ய  தட்டுப்பாடின்றி  உரம் கிடைப்பதை  தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்