மதுரையைச் சேர்ந்த சாமிராஜ், மார்கரெட் இன்பன்ட் ஜெனிபர் மற்றும் ரெங்கராஜ் ஆகியோர் சிவகாசி பகுதிகளில் உள்ள ஜிம்களில் சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாடு வாரிய (INCB) அதிகாரிகள் போல் சோதனை நடத்தி மிரட்டி பணம் பறித்து போலீஸிடம் சிக்கினர்.
சிவகாசியில் ஜிம் நடத்திவரும் சிவமுருகனிடம் ரூ. 30,000 அபராதம் செலுத்தவேண்டும் என்று கூறியபோது, ‘அப்படியெல்லாம் அபராதம் கட்ட முடியாது. நான் முறைப்படி பார்த்துக்கிறேன்’ என்று பணம் தர மறுத்திருக்கிறார். உடனே அந்த போலி அதிகாரிகள் ‘அப்படியென்றால், உங்களால் எவ்வளவு தரமுடியுமோ தாங்க’ என்று கூற சந்தேகமடைந்த சிவமுருகன், சிவகாசியில் ஜிம் நடத்தும் மற்றவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அவர்கள் சிவமுருகனின் ஜிம்முக்கு வந்து, போலிகள் தங்களிடம் பணம் பறித்ததைக் குமுறலுடன் கூறியிருக்கின்றனர். உஷாரான போலி அதிகாரிகள், மிரட்டி வாங்கிய பணத்தைத் திரும்பத் தந்துள்ளனர்.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு காவல்நிலையத்துக்கு தகவல் கிடைத்தவுடன், போலி அதிகாரிகளாக நடித்து சிவகாசியில் உள்ள 7 ஜிம்முகளில் பணம் பறித்த மூன்று பேரிடமும் விசாரணை நடத்தி, போலி சீல்கள் மற்றும் கடிதங்களைப் பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்த நிலையில், மூன்று பேரும் ரிமான்ட் செய்யப்பட்டுள்ளனர்.