
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஜி.அரியூர் கிராமத்தைச் சேர்ந்த அரசன் என்பவரது மகன் வீரன். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக திருக்கோவிலூர் பகுதியில் தன்னை வழக்கறிஞர் எனக் கூறிக்கொண்டு பல்வேறு செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதில் ஒரு படி மேலே சென்ற வீரன் நீதிமன்றத்திற்கே சென்று தான் ஒரு வழக்கறிஞர் எனக் கூறி வாதாடி வந்துள்ளார்.
இந்த நிலையில் இவரது வழக்கறிஞர் எண் மற்றும் சான்றிதழ் பொய்யானவை என திருக்கோவிலூர் வழக்கறிஞர் சங்கத்தில் புகார் எழுந்த நிலையில் அவரது வழக்கறிஞர் எண் மற்றும் சான்றிதழ் குறித்து திருக்கோவிலூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜ்குமார் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில் விசாரணை மேற்கொண்டார். அதில் வீரன் பயன்படுத்திய வழக்கறிஞர் எண் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் எனும் வழக்கறிஞருடையது என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் திருக்கோவிலூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜ்குமார் புகார் அளித்தார். இந்த புகாரின் பெயரில் கடந்த 2022 ஆம் ஆண்டு திருக்கோவிலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து போலி வழக்கறிஞர் வீரனை தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த வீரன் முன் ஜாமின் பெற்று வெளியே இருந்தார்.
பின்னர் இந்த வழக்கு மூன்றாண்டு காலமாக திருக்கோவிலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணையான இன்று போலியாக தன்னை வழக்கறிஞர் எனக் கூறி பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்திலே வாதாடிய போலி வழக்கறிஞர் வீரன் என்பது தெரியவர திருக்கோவிலூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் வெங்கடேஷ்குமார் வீரனுக்கு ஆறாண்டுகள் சிறைத் தண்டனையும் 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
திருக்கோவிலூர் நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது இந்த வழக்கில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.