சேலத்தில், பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி சிமெண்ட் தயாரித்து குறைந்த விலைக்கு விற்று வந்த கட்டடத் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் அருகே உள்ள வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (55). கட்டடத் தொழிலாளி. கட்டுமானத் துறையில் உள்ள அனுபவத்தின் அடிப்படையில் தனியாக ஆள்களை வைத்து ஒப்பந்த அடிப்படையில் வீடுகள் கட்டிக்கொடுத்து வருகிறார். இவரே, சிமெண்ட், இரும்பு கம்பிகளையும் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது சந்தையில் முன்னணியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் பிராண்டு பெயரிலான சிமெண்ட் மூட்டைகளை, இவர் 70 ரூபாய் வரை விலை குறைத்து விற்பனை செய்து வருவது, அந்த நிறுவனத்தின் முகவர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரித்தபோது, முருகன் போலி சிமெண்ட் தயாரித்து, அதை பிரபல நிறுவன பிராண்டின் பெயரில் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப மேலாளர் சஞ்சய்குமார் என்பவர், முருகன் மீது சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமாரிடம் புகார் அளித்தார்.
ஆணையரின் உத்தரவின்பேரில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சூரமங்கலம் காவல்துறையினர், முருகனை வியாழக்கிழமை (பிப். 20) கைது செய்தனர். அவருக்குச் சொந்தமான கிடங்கில் இருந்து விற்பனைக்காக ஒரு மினி லாரியில் கொண்டு செல்லப்பட்ட 50 மூட்டை போலி சிமெண்ட் மூட்டைகளையும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். புகார் அளித்த பிரபல நிறுவனத்தின சிமெண்ட் பைகளை விலைக்கு வாங்கி, அதில் எம்சாண்ட், சிமெண்ட், மணல் கலந்து விற்பனை செய்துள்ளது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.