Skip to main content

கலைஞர் சிலை திறப்பதற்கு அனுமதி கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

Published on 01/11/2020 | Edited on 01/11/2020

 

 

dmk party kalaigner statue chennai high court

தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான எம்.நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில்,‘மாதவரத்தை அடுத்துள்ள கொசப்பூரில், எனக்குச் சொந்தமான நிலத்தில் தி.மு.க.வின் மறைந்த தலைவர் மு.கருணாநிதியின் மார்பளவு வெங்கலச் சிலையை அமைத்துள்ளேன்.  அதனை,  தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்துவைப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. 

 

தி.மு.க. தலைவராகவும், முதல்வராகவும், சமூகத்தில் கருணாநிதி நிகழ்த்திய சாதனைகளையும், வளர்ச்சிகளையும் கொண்டாடும் வகையில், தி.மு.க.வினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தும் நிலையில், என் பாசத்தலைவனுக்கு என் சொந்த இடத்தில் அமைத்துள்ள வெண்கலச் சிலையை அமைத்துள்ளேன். 

 

திறப்பு விழா நடத்த அனுமதி கோரி ஆகஸ்ட் 27 மற்றும் செப்டம்பர் 7 ஆகிய தேதிகளில் மனு அனுப்பினேன். காவல்துறை மற்றும் வட்டாட்சியர் ஆகியோருக்கு மனு அனுப்பியும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. எனவே. எனது  மனுவைப் பரிசீலித்து, திறப்பு விழாவிற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

 

இந்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ஒருவர் தனக்குச் சொந்தமான நிலத்தில் சிலைகளை வைக்கலாம் என்பது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 2- ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்