'ரஜினிகாந்த் பவுண்டேஷன்' என்ற பெயரில் போலி பேஸ்புக் முகவரி தொடங்கி இரண்டு கோடி ரூபாய் பண மோசடி செய்துள்ளதாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
'ரஜினிகாந்த் பவுண்டேஷன்' என்ற பெயரில் ஏற்கனவே அறக்கட்டளை ஒன்று செயல்பட்டு வரும் நிலையில், போலியாக ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் கணக்குத் தொடங்கி பண மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் பவுண்டேஷனின் அறங்காவலர் சிவராமகிருஷ்ணன் கொடுத்துள்ள அந்தப் புகாரில், 'ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் ஏழை மக்களுக்கு உதவி செய்து வரும் நிலையில், முகநூலில் போலியாக கணக்கு ஒன்றைத் தொடங்கி 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. குலுக்கல் முறையில் பரிசு தரப்படும் என்றும் ஏமாற்றப்பட்டுள்ளது. இது நடிகர் ரஜினிகாந்தின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையும் இந்தப் புகார் தொடர்பாக விசாரணை செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளது.