Skip to main content

காடுவெட்டியில் ஜெ.குருவுக்கு நினைவு மணிமண்டபம்: நாளை மறுநாள் அடிக்கல் நாட்டு விழா!

Published on 11/12/2018 | Edited on 11/12/2018
g

 

காடுவெட்டி ஜெ.குருவின் நினைவு மண்டபம் தொடர்பாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கை:

’’வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவுக்கு நினைவு மணிமண்டபம் அமைக்கப்படவுள்ளது.  இதற்கான அடிக்கல் நாட்டுவிழா காடுவெட்டியில் நாளை மறுநாள் (13.12.2018) வியாழக்கிழமை நடைபெறுகிறது.

 

ஜெ.குருவின் மறைவைத் தொடர்ந்து புதுச்சேரியிலும், காடுவெட்டி கிராமத்திலும் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் கண்ணீர் உரையாற்றிய ராமதாஸ்,‘‘  ஜெ. குரு வாழ்ந்த காடுவெட்டி கிராமத்தில் அவருக்கு நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும். வன்னியர் கல்வி அறக்கட்டளை சட்டக்கல்லூரி வளாகத்திற்கு  குரு பெயர் சூட்டப்படும். அந்த வளாகத்தில்  குரு கம்பீரமாக நடந்து வருவது போன்ற திருவுருவச்சிலை அமைக்கப்படும்’’ என்று அறிவித்திருந்தார்.

 

சட்டக்கல்லூரி வளாகத்திற்கு  ஜெ.குரு பெயர் சூட்டப்பட்டதுடன், அவரது திருவுருவச் சிலையும் கடந்த 16.09.2018 அன்று திறந்து வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக குரு வாழ்ந்த காடுவெட்டி  கிராமத்தில் அவரது நினைவு மணிமண்டபம் அமைக்கப்படவுள்ளது. காடுவெட்டி கிராம மக்கள் கூடிப் பேசி ஒருமனதாக எடுத்த முடிவின் அடிப்படையில்,  கும்பகோணம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (எண் 36)  அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் காடுவெட்டி கிராமத்தில் உள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளை நிலத்தில்  ஜெ.குருவின் நினைவு மணிமண்டபம் சிறப்பாக கட்டியெழுப்பப்பட உள்ளது.

 

இதற்கான அடிக்கல் நாட்டுவிழா மணிமண்டபம் அமைக்கப்படவுள்ள நிலத்தில் 13.12.2018 வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தின் நிறுவனர் ராமதாஸ் பங்கேற்று  குருவின் நினைவு மணிமண்டபம்  அமைக்க அடிக்கல் நாட்டுகிறார். அதற்கான கல்வெட்டை பா.ம.க. இளைஞரணித் தலைவரும், தருமபுரி மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ்  திறந்து வைக்கவுள்ளார்.

 

அடிக்கல் நாட்டு விழாவிற்கு பா.ம.க. தலைவரும், வன்னியர் கல்வி அறக்கட்டளை அறங்காவலருமான  ஜி.கே.மணி தலைமை ஏற்கிறார். சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவர் முனைவர் ச. சிவப்பிரகாசம்,  குருவின்  துணைவியார் சொர்ணலதா குருநாதன், மணிமண்டபம் அமைக்க வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு நிலம் கொடுத்த தனி வீடு நா. ஆனந்த மூர்த்தி, அவரது சகோதரர் தனி வீடு. நா.ரவி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். வன்னியர் கல்வி அறக்கட்டளை அறங்காவலர்கள் மருத்துவர் இரா.கோவிந்தசாமி, மருத்துவர் பி. சுந்தர்ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். வன்னியர் சங்கச் செயலாளர் க.வைத்தி, சமூக முன்னேற்ற சங்கத்தின் மாநில செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் காடுவெட்டி கிராம ஊர்ப் பெரியவர்கள், காடுவெட்டி  கிராம மண்டகப்படி  பிரமுகர்களும் மாவீரன் குருவின் நினைவு மண்டப அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கின்றனர்.

 

இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி, சமூக முன்னேற்ற சங்கம், வன்னியர் சங்கம்,  உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், காடுவெட்டி கிராமப் பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ’’

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாமகவை எதிர்த்து ஜெ.குரு மனைவி போட்டி..!

Published on 15/03/2021 | Edited on 15/03/2021

 

ddd

 

கடந்த 2018ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக இறந்தார் காடுவெட்டி ஜெ.குரு. அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர், பாமக எம்எல்ஏவாகவும், வன்னியர் சங்கத் தலைவராகவும் பதவி வகித்தவர். இவர் மறைந்ததையடுத்து அவரது மகன் கனலரசன், குருவின் ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து மாவீரன் மஞ்சள்படை என்ற அமைப்பைத் தொடங்கினார். 

 

இந்தநிலையில், குருவின் மனைவி சொர்ணலதா மற்றும் மகன் கனலரசன் தரப்பினரும், ஐ.ஜே.கே. கட்சி தரப்பினரும் சந்தித்துப் பேசியுள்ளனர். 2021 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலான அணியில் ஐ.ஜே.கே.வுக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஐ.ஜே.கே.வுக்கு ஒதுக்கப்பட்ட 40 தொகுதிகளில் ஒன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் தொகுதி. இதில் சொர்ணலதா, ஐ.ஜே.கே. சார்பில் போட்டியிடுகிறார். இந்த அறிவிப்பை ஐ.ஜே.கே. கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து சென்னையில் வெளியிட்டார்.

 

மேலும் பேசிய அவர், “காடுவெட்டி குருவின் ஆதரவாளர்களும் வன்னியர் சமூகத்தினரும் இந்தத் தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சிக்கு (ஐ.ஜே.கே.) மாபெரும் வெற்றியைத் தேடி தருவார்கள். எங்களின் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.” என்று தெரிவித்தார்.

 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு ஜெயங்கொண்டம் தொகுதி உள்பட 23 தொகுதிகளைப் பெற்றுள்ளது. இதில் ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமக சார்பில் அக்கட்சியின் வழக்கறிஞரும் செய்தித் தொடர்பாளருமான கே.பாலு போட்டியிடுகிறார். 

 

 

Next Story

திடீர் திருப்பம்... பாஜகவுக்கு ஏமாற்றம்?

Published on 29/10/2020 | Edited on 29/10/2020
Guru son Kanalarasan

 

மறைந்த பாமக முன்னாள் எம்எல்ஏவும், வன்னியர் சங்க தலைவருமான ஜெ.குருவின் மகன் கனலரசன். இவரை பாஜகவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அக்கட்சியினர் தீவிரமாக இருந்தனர். பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்களையும் கனலரசன் சந்திக்க ஏற்பாடுகள் செய்தனர். பாஜகவில் அவரை இணைப்பதற்கான முயற்சிகள் நடந்த வந்த நிலையில் தற்போது அதில் தோல்வி ஏற்பட்டுள்ளது. 

 

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்த சமூக சேவகரும் வழக்கறிஞருமான இன்சோ.பிரகாஷ், செனடாப் சாலையில் உள்ள திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு  கனலரசனை அழைத்துச் சென்று சந்திக்க ஏற்பாடு செய்தார். அப்போது வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிக்கும் தனது மாவீரன் மஞ்சள் படையின் ஆதரவை அப்போது கனலரசன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆதரவு தெரிவித்தற்காக கனலரசனுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.