எல்லோராலும் எம்.ஜி.ஆர், சிவாஜி போல் ஆகிவிட முடியாது என ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத்தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
கோபிசெட்டிபாளையத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் 'ஏர் கலப்பை' பேரணி இன்று (17.12.2020) நடந்தது. இதற்குத் தலைமை வகித்த கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “எல்லோராலும் எம்.ஜி.ஆர், சிவாஜி போல் ஆகிவிட முடியாது. நடிப்புக் கலையில் உட்சமான சிவாஜியே, மக்களைக் கணக்குப் போடத் தெரியாமல் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தார்.
எம்.ஜி.ஆர்-க்கு நிகரான செல்வாக்கை கொண்டவர் சிவாஜி. ஆனால், அவராலேயே அரசியலில் வெற்றிபெற முடியவில்லை. அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி, அ.தி.மு.க.வின் வெற்றியைக் கண்டிப்பாகப் பாதிக்கும். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை 234 தொகுதிகளையும் கூட்டணியில் கேட்க வேண்டும் என்றுதான் எங்களுக்கும் ஆசை. ஆனால், அது சாத்தியமில்லை. தி.மு.க.வுடன் காங்கிரஸ் சுமூகமாகப் பேச்சுவார்த்தை நடத்தி, வேண்டிய தொகுதிகளைப் பெற்றுக்கொள்வோம்.
பா.ஜ.க. வேல்யாத்திரை மூலம் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. தமிழகத்தில் பா.ஜ.க பல கோடிகளைச் செலவு செய்து வருகிறது. எத்தனை கோடி செலவு செய்தாலும் பா.ஜ.க.வை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சிலிண்டர் விலை 100 ரூபாய் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை உலகச் சந்தையில் விலை குறைந்தாலும், இந்தியாவில் தான் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மோடி அரசு விவசாயிகளுக்குத் துரோகம் செய்துள்ளது. பணக்காரர்களுக்காகவே வேளாண் சட்டங்களை மோடி கொண்டுவந்துளார். நாட்டில் பொருளாதாரம் வளர்ந்து கொண்டுள்ளது என்பது தவறு. உண்மையில் மோடியின் தாடிதான் வளர்ந்து வருகிறது” என நகைச்சுவையாகப் பேசினார்.