Skip to main content

“பிரதமர் மோடி தமிழ்நாட்டில் குடியேறினாலும் வாக்கு விழப்போவதில்லை”  - கனிமொழி எம்.பி.

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
Even if Prime Minister Modi settles in Tamil Nadu the vote will not fall says Kanimozhi MP

பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கடந்த 27 மற்றும் 28 ஆம் தேதி தமிழகம் வந்திருந்தார். அதன்படி 27 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனையடுத்து இரண்டாவது நாளாக கடந்த 28 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகை தர உள்ளார். அதன்படி பிரதமர் மோடி மகாராஷ்டிராவில் இருந்து நாளை (04.03.2024) பிற்பகல் 02.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அதன் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 03.20 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொள்கிறார். பிரதமர் வருகையையொட்டி கல்பாக்கத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் என 10 மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 10 வெடிகுண்டு சோதனைக் குழு, 8 மோப்ப நாய்கள் மற்றும் கடலோரப் படை மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கல்பாக்கத்திற்கு வருகை தரும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்குப் பிறகே போலீசார் அனுமதித்து வருகின்றனர். மேலும் பிரதமர் மோடி வருகையையொட்டி மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள், “மாமல்லபுரம், கொக்கிலிமேடு, மெய்யூர், சட்ராஸ், புதுபட்டினம், உய்யாளி குப்பம் போன்ற பத்து கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று (03.03.2024) மாலை 3 மணி முதல் நாளை (04.03.2024) மாலை 6 மணி வரை மீன்பிடிக்க செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.

கல்பாக்கம் அணுமின் நிலைய நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மாலை 04.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம் வருகிறார். அங்கு பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பதால் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளதால் நாளை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதற்கு ஏற்றாற்போல் பயணத்தை திட்டமிட சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுமட்டுமின்றி பிரதமர் மோடி வருகை மற்றும் பல்வேறு காரணங்களையொட்டி சென்னையில் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறி ட்ரோன்களை பறக்கவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும் பிரதமர் மோடி மாலை 06.15 மணிக்கு கார் மூலம் சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹைதராபாத் புறப்பட்டு செல்கிறார். 

Even if Prime Minister Modi settles in Tamil Nadu the vote will not fall says Kanimozhi MP

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் நடைபெற்ற திமுக பரப்புரை பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பிரதமர் தமிழகம் வருவது குறித்து பேசுகையில், “பிரதமர் மோடி தமிழ்நாட்டிலேயே தான் இருக்கிறார். போன வாரம், நேற்று, நாளை, அடுத்த வாரம் என தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை வந்தால் என்ன? பிரதமர் மோடி தமிழ்நாட்டில் குடியேறினாலும் வாக்கு விழப்போவதில்லை. இங்கே இருக்கக் கூடிய மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” எனத் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்