மத்திய பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதா இந்தியா முழுக்க கடும் எதிர்ப்புகளை உருவாக்கி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுக தலைமையில் அதன் கூட்டணி கட்சிகள், பல்வேறு அமைப்புகளும் இணைந்து இந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து பலவடிவங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னையில் கல்லூரி மாணவிகள் குடியுரிமை திருத்த சட்ட மசோதா வேண்டாம் என எழுதி தங்களது வீட்டின் முன்பு கோலமிட்டனர். குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து கோலமிட்ட மாணவிகள் மீது வழக்கு தொடர்ந்தது தமிழக காவல்துறை. இதை மிகக் கடுமையாக கண்டித்து அறிக்கை விட்டார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வீட்டு முன்பும், நாடாளுமன்ற எம்பி கனிமொழி வீட்டின் முன்பும், சென்னையில் பல்வேறு வீடுகளில் முன்பும் காலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோலம் போடப்பட்டது.
இதன் பிறகு தமிழகம் முழுக்க பல்வேறு ஊர்களில் வேண்டாம் குடியுரிமை திருத்த சட்ட மசோதா என்று கோலத்தில் எழுதி வீட்டின் முன்பு கோலமிட்டு இருந்தனர். இதேபோல் ஈரோட்டில் யாழ் நகர், ராஜாஜிபுரம், கருங்கல்பாளையம் என பல்வேறு பகுதியில் வேண்டாம் குடியுரிமை என எழுதி கோலமிட்டனர் பெண்கள். கோலமிட்டவர்களின் வீட்டின் முகவரி, பெயர்களை போலீசார் பட்டியலிட்டு சென்றுள்ளனர்.