தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஈரோட்டில் இரண்டாவது வருடமாக பவளத்தாம்பாளையம் என்ற கிராமத்தில் ஏஇடி என்ற பள்ளி மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் ஜல்லிக்கட்டு பேரவையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் நேற்று சிறப்பாக செய்திருந்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 300 காளைகளும், 350 வீரர்களும் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் ஈரோடு பவளத்தாம்பாளையம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன் ஆகியோர் இன்று காலை தொடங்கி வைத்தனர். வாடிவாசலில் காளைகள் சீறிப்பாய்வதைக் காண வெளிமாநிலத்திலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ரசிகர்கள் குவிந்துள்ளனர். இதோபோல் புதுக்கோட்டை வடமலாப்பூரில் கோயில் காளையை அவிழ்த்து விட்டு அமைச்சர் விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும் 200 வீரர்களும் பங்கேற்கின்றனர்.