தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு மற்றும் நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைப்பதற்காக பல்வேறு மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.12.2024) தூத்துக்குடி மாவட்டத்திற்குச் சென்றுள்ளார். அதன் ஒரு பகுதியாகத் தூத்துக்குடி மீளவிட்டான் என்ற இடத்தில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பில் தரை தளம் மற்றும் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்கா பூங்காவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மினி டைடல் பூங்கா பூங்காவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.மேலும் இரு நிறுவனங்களுக்கு இடஒதுக்கீட்டிற்கான ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தலைமைச் செயலாளர் முருகானந்தம் எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்த மினி டைடல் பூங்காவானது, வாகனம் நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், கலையரங்கம், தடையற்ற மின் வசதி ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது. ஏறத்தாழ 32 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மினி டைடல் பூங்கா ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடியதாக அமைந்துள்ளது எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைடல் பூங்கா நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் சென்ற போது மக்கள் கூட்டத்தைப் பார்த்து வாகனத்தை விட்டு இறங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் சென்று பேசினார். சிறிது தூரம் நடந்து சென்று வரவேற்பை பெற்றுக்கொண்டார். அங்கிருந்தவர்களிடம் கை குலுக்கி வணக்கம் தெரிவித்தார். குழந்தைகள் தூக்கிக் கொஞ்சினார். மேலும் குழந்தைகள், பெரியவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்செல்ஃபி எடுத்துக் கொண்டார். பொதுமக்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக மினி டைடல் பூங்காவைத் திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து நாளை (30.12.2024) காலை 10 மணிக்குப் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்க பணிகளைத் தொடங்கி வைக்க இருக்கிறார். புதுமைப்பெண் திட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று வரும் 75 ஆயிரத்து 28 மாணவியரின் வங்கிக் கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என அரசு ஏற்கனவே அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கான விரிவாக்க நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை கலந்துகொள்ள உள்ளார்.