இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவை போராடிப் பெற்றிருக்கிறது அதிமுக ! இந்த ஆதரவைப் பெறுவதற்காக சில பேரங்களுக்குப் பணிந்துள்ளது அதிமுக தலைமை!
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது பாஜக. இதற்காக நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, 'இடைத்தேர்தல் தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கப்படாது. அதில் முழுமையாக அதிமுக மட்டுமே போட்டியிடும் ' என நிபந்தனை விதித்தார் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி. இதனையே அதிமுக தலைவர்கள் கூட்டணி கட்சிகளிடம் வலியுறுத்தினர். இதனை தோழமைக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டனர். இடைத்தேர்தல் நடந்த 22 தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிட்டது.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு காலியான நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களே களமிறங்கியுள்ளனர். இந்த நிலையில், அதிமுகவுக்கு தனது ஆதரவை பாஜக தெரிவிக்கவில்லை. பாஜகவின் ஆதரவைக் கேட்டு அதிமுக தரப்பிலிருந்து மூத்த அமைச்சர்கள் பகீரத முயற்சி எடுத்தனர். ஆனால், ஆதரவை தெரிவிக்காமல் இழுத்தடித்துக் கொண்டே இருந்த பாஜக தலைமை தற்போது அதிமுகவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், " இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் வகையில் பாஜகவினர் மிகத் தீவிரமாக செயல்படுவர் " என்றிருக்கிறார். அதிமுகவை பாஜக ஆதரித்திருக்கும் பின்னணி குறித்து விசாரித்தபோது, " இடைத்தேர்தல் நடக்கும் 2 தொகுதிகளில் ஒரு தொகுதியை பாஜக கேட்டது. குறிப்பாக, நாங்குநேரியில் பாஜக போட்டியிட விரும்பி ஓபிஎஸ் மூலம் எடப்பாடிக்கு அழுத்தம் தரப்பட்டது. ஆனா, முந்தைய நிபந்தனைகளைச் சுட்டிக்காட்டி தொகுதியை ஒதுக்க மறுத்ததுடன் அவசரம் அவசரமாக வேட்பாளாரை அறிவித்தார் எடப்பாடி. இதில் பாஜக தலைமை அதிர்ப்தியடைந்தது.
அதனாலேயே அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதில் ஆர்வம் காட்டவில்லை பாஜக. மேலும், தொகுதி ஒதுக்காததில் அமித்சா கோபமாக இருப்பதாகவும் அதிமுக தலைமைக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில்தான் மூத்த அமைச்சர்கள் இருவரிடம் பொறுப்பை ஒப்படைத்தார் எடப்பாடி. அவர்களோ, மத்திய அமைச்சரும் தமிழகத்தில் அதிமுக அரசியலை கவனிப்பவருமான பியூஸ்கோயலிடம் விவாதித்தார்கள். அப்போது, ' உள்ளாட்சி தேர்தலில் பாஜகவின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும். எல்லாம் நல்லபடியாக நடக்கும். இந்த இடைத்தேர்தலில் அதிமுகவை பாஜக ஆதரிக்க வேண்டும் ' என கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து, மேலிடத்திடம் விவாதித்துவிட்டு, 'உள்ளாட்சி தேர்தலில் சென்னை உட்பட 5 மாநகராட்சி மேயர் பதவி பாஜகவுக்கு வேண்டும். மற்ற நிலைகளில் 35 சதவீத இடங்கள் தேவை. இதற்கு ஒப்புக்கொண்டால் கூட்டணி தொடரும். இல்லேன்னா, உறவை முறித்துக்கொள்ளலாம் ' என தெரிவித்திருக்கிறார் பியூஸ்கோயல்.
இதனைத் தொடர்ந்து, பாஜக தலைமைக்கும் அதிமுக தலைமைக்கும் நிறைய விவாதங்கள் நடந்தன. கடைசியில், 5 மேயர் இடங்களை விட்டுக்கொடுப்பதாக அதிமுக தலைமை ஒப்புக்கொண்டது. இதனையடுத்தே இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு தனது ஆதரவை பாஜக தெரிவித்தது. இடைத்தேர்தலில் ஆதரவைப் பெற , பாஜகவின் நிபந்தனைகளுக்குப் பணிந்துள்ளார் முதல்வர் எடப்பாடி " என பின்னணிகளை விவரிக்கின்றனர் பாஜக தலைவர்களுக்கு நெருக்கமானவர்கள்.