உருமாற்றம் பெற்று அதிக வீரியத்துடன் இங்கிலாந்தில் புதிய வகை கரோனா தொற்று பரவி வருகிறது. இதையடுத்து, சேலத்தில் இருந்து அந்நாட்டிற்குச் சென்றவர்கள் அவசர அவசரமாக சேலம் திரும்பியுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் முதல் டிச. 27- ஆம் தேதி வரை இங்கிலாந்தில் இருந்து மொத்தம் 57 பேர் சேலத்திற்கு வந்துள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை கூறுகிறது. இதில் இதுவரை 41 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று இருக்கிறதா என்பது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 31 பேருக்கு நெகட்டிவ் ரிசல்ட் கிடைத்துள்ளது. இன்னும் 10 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவில்லை.
தொற்று இல்லை என தெரிய வந்தவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரவர் வீடுகளில் தங்களை தொடர்ந்து 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், வெளி நபர்களை வீட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பியவர்களின் குடும்பத்தினருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.
இங்கிலாந்தில் இருந்து சேலம் திரும்பியவர்களில் 5 பேர் வேறு மாவட்டத்திற்குச் சென்றுள்ளனர். அவர்களைப் பற்றிய தகவல்கள் அந்த மாவட்ட சுகாதாரத்துறைக்குத் தெரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர மீதமுள்ள நபர்களை தேடி வருகிறோம் என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.