Skip to main content

E.M.I. தொகை பிடித்தம்! வங்கி அதிகாரிகளின் அடாவடித்தனம்! போராட்டத்தில் ஓய்வுபெற்ற VAO

Published on 19/04/2020 | Edited on 19/04/2020

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ளது பெ. பூவனூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். 71 வயதுள்ள இவர் கிராம நிர்வாக அலுவலராக அரசு பணி செய்து ஓய்வு பெற்றவர். இவர் விருத்தாசலம் கடலூர் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில், தன் பெயரில் வரவு செலவு கணக்கு வைத்துள்ளார். இந்த வங்கி  மூலம் அரசு வழங்கும் ஓய்வூதிய பலன்களை பெற்று வந்தார்.


 

 

eee



இந்த நிலையில் தற்போது கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓய்வூதியதாரர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக கூடாது என்பதற்காக வங்கி கணக்கிலிருந்து யாருக்கும் இ.எம்.ஐ. தொகை பிடித்தம் செய்யக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் தர்மலிங்கத்தின் வங்கிக்கணக்கில் இருந்து கடந்த 2-ஆம் தேதியன்று 5500 ரூபாய் என இரண்டு மாதத்திற்கான இ.எம்.ஐ. தவணைத் தொகையாக 11 ஆயிரம் ரூபாயை வங்கி அதிகாரிகள் தர்மலிங்கத்தின் கணக்கில் இருந்து பிடித்தம் செய்து கொண்டனர்.
 

பணம் பிடித்தம் செய்ததை அறிந்த தர்மலிங்கம் வங்கிக்குச் சென்று வங்கி அதிகாரிகளிடம் அரசு உத்தரவை மீறி பணத்தை பிடித்தம் செய்யலாமா? என்று கேட்டுள்ளார். அதற்கு அதிகாரிகள் இன்னும் ஒரு வாரத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை உங்கள் வங்கிக் கணக்கில் சேர்த்து விடுகிறோம் என்று கூறியுள்ளனர்.
 

ஆனால் இரண்டு வாரங்கள் கடந்தும் அவர் வங்கி கணக்கில் வங்கி ஊழியர்கள் பணத்தை கணக்கில் சேர்க்கவில்லை. இதுகுறித்து நேற்று மீண்டும் வங்கிக்கு சென்று வங்கி மேலாளரை சந்தித்து தர்மலிங்கம் கேட்டுள்ளார். அப்போது வங்கி மேலாளர் கோபமாக தர்மலிங்கத்திடம் இப்போது வங்கியில் பணமே இல்லை. அதனால் உங்கள் கணக்கில் பணத்தை சேர்க்க முடியாது என்று கோபமாக கூறியுள்ளார்.
 

இந்த பதிலைக் கேட்ட தர்மலிங்கம் கோபத்துடன் வங்கியை விட்டு வெளியே வந்தவர், வங்கியின் முன்பு தனிமனிதனாக அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுபற்றி தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் தர்ணா போராட்டம் நடத்திய தர்மலிங்கத்தை சந்தித்து விபரம் கேட்டனர்.  தர்மலிங்கத்தின் நியாயமான கோரிக்கையை புரிந்து கொண்ட போலீசார், இதுபற்றி வங்கி மேலாளரை சந்தித்து விசாரித்தனர்.

 

i

பிரச்சனை பெரிதாக ஆனதும் உடனே காவல்துறையினரிடம் தர்மலிங்கத்தின் பிடித்தம் செய்த பணத்தை உடனடியாக அவரது கணக்கில் சேர்த்துவிடுவதாக கூறினார்கள். அதன்படியே சில நிமிடங்களில் தர்மலிங்கத்தின் பணத்தை அவரது கணக்கிலும் சேர்த்துவிட்டனர். வங்கியில் பணமே இல்லை என்று கூறிய வங்கி மேலாளர், தர்மலிங்கம் வீதியில் இறங்கி போராடிய உடனே அவரது கணக்கிற்கு எப்படி பணம் போய் சேர்ந்தது. இதன்மூலம் போராடினால்தான் எதுவும் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. வங்கி முன்பு தர்மலிங்கம் நடத்திய திடீர் தர்ணா போராட்டம் விருத்தாசலத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. 
 

சார்ந்த செய்திகள்