தி.மு.க.வின் மகளிரணி அணி சார்பில் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து தூத்துக்குடியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய கனிமொழி எம்.பி., "கல்வி, சுகாதாரம், பெண்கள் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு எனப் பல துறைகளில் முன்னேறிய மாநிலமாக இருந்த தமிழகம், கடந்த பத்து ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் பின் தங்கிய மாநிலமாகிவிட்டது. தற்போதைய கரோனாத் தொற்று காலகட்டத்தில் மக்களிடம் வாங்கும் சக்தி போய் விட்டது. மக்கள் போதிய வருமானமின்றித் தவிக்கின்றனர். இந்த நிலையில் டீசல், கேஸ் மற்றும் பெட்ரோல் விலை ஏற்றப்பட்டது பெரும் கண்டனத்திற்குரிய செயல். விலைவாசி உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறி விட்டது.
ஏழை, எளிய, நடுத்தர உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் இந்த சிரமங்களை மத்திய அரசு புரிந்து கொண்டு விலை ஏற்றத்தைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் இதற்கு எதிராக தி.மு.க. தொடர்ந்து போராட்டம் மேற்கொள்ளும்" என்றார்.
அதைத் தொடர்ந்து, நெல்லை மாவட்டத்தில் வாக்கு சேகரிப்பு மற்றும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட கனிமொழி எம்.பி., நெல்லை ஜங்ஷனில் உள்ள அண்ணா, மற்றும் வ.உ.சி. ஆகிய தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு கங்கைகொண்டானில் கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பின்பு பாளையிலுள்ள வண்ணாரப்பேட்டையில் சலவைத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய கனிமொழி, அவர்களின் பல்வேறு பிரச்சனைகளைக் கேட்டறிந்தவர். அதன் தொடர்ச்சியாக கே.டி.சி.நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும், பாளையை ஒட்டியுள்ள அருகன்குளம் கிராமத்தில் மக்களைச் சந்தித்தவர் அவர்களிடம் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
போகுமிடங்களில் திரளும் ஆண்கள், பெண்கள் கூட்டத்தில் நடப்பு கால நிலைமைகளை எடுத்து வைக்கிறார் கனிமொழி எம்.பி.