Skip to main content

சொத்து தகராறு; தம்பியை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற அண்ணன்!

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

elder brother incident his brother with a rolling pin in a property dispute
ராஜகணபதி - செல்வம்

 

சேலத்தில் சொத்து தகராறில் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்ததால் உடன்பிறந்த தம்பி என்றும் பாராமல் அண்ணனே உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.    

 

சேலம் பொன்னம்மாபேட்டை செங்கலணை சாலையைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு செல்வம் (52), ராஜகணபதி (47) என்ற இரண்டு  மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. மகன்கள் இருவரும் கூலித்தொழிலாளர்கள். செல்வத்தின் மனைவி ஸ்ரீதேவி. இவர்களுடைய இரண்டு மகள்களும் தற்போது சென்னையில் வேலை செய்து வருகின்றனர். ராஜகணபதியின் மனைவி கடந்த 20 ஆண்டுக்கு முன்பே கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.

 

இந்த நிலையில், அண்ணன், தம்பிக்கு இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. வீட்டின் நிலம் தந்தை பெயரில் உள்ளது. மாமியார் கொடுத்த பணத்தில் செல்வம் வீட்டை புதுப்பித்துக் கட்டியுள்ளார். அந்த வீட்டின் தரை தளத்தில் ராஜகணபதியும் அவருடைய தாயார் பாக்கியமும் வசித்து வருகின்றனர். முதல் தளத்தில் செல்வம் தனது குடும்பத்துடன் வசிக்கிறார். ராஜகணபதி சொத்தில் பங்கு கேட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில் மே 16ம் தேதியன்று அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜகணபதி, தனது அண்ணி ஸ்ரீதேவியை ஆபாசமாகப் பேசியுள்ளார்.

 

இது குறித்து அவர் அம்மாபேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், 'சொத்தில் பங்கு கேட்டு தகராறு செய்து வரும்  ராஜகணபதி, காஸ் சிலிண்டரை திறந்து விட்டு எங்களை கொன்று விடுவதாக மிரட்டி வருகிறார்' என்று கூறியிருந்தார். அதன்பேரில் காவல்துறையினர் ராஜகணபதியை அழைத்து விசாரித்து அவரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். அதையடுத்து அண்ணன், தம்பி இருவரும் சமாதானமாகப் போனதற்கு அடையாளமாக சம்பவத்தன்று இரவு ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அவர்களின் தாயார் பாக்கியம், உறவினர் இல்லத் திருமண விழாவிற்காக டெல்லி சென்றுவிட்டதால் அன்று இரவு ராஜகணபதி மட்டும் வீட்டில்  தனியாக தூங்கிக் கொண்டிருந்தார்.

 

இந்நிலையில், மே 17ம் தேதி காலை, தான் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து பார்த்தபோது வீட்டில் ராஜகணபதி தலை நசுங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததாக அவருடைய மனைவியுடன் அம்மாபேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் செல்வத்திடம் விசாரித்தபோது, தனது தம்பி எப்படி கொல்லப்பட்டார் என்று தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளார். இதை நம்பாத காவல்துறையினர் தங்கள் 'பாணியில்' விசாரணையை நடத்தியபோது, உருட்டுக்கட்டை மற்றும் செங்கல்லால் தாக்கி ராஜகணபதியை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

 

சம்பவத்தன்று நள்ளிரவு 1.30 மணியளவில் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜகணபதி, 'இது என் தாய் வீடு. இந்த வீட்டை வாடகைக்கு விட்டு அதில் வரும் பணத்தை வைத்து பிழைத்துக் கொள்வேன். இது சிவில் வழக்கு என்பதால் காவல்துறையினரும் விசாரிக்கமாட்டார்கள். அதனால் இந்த வீட்டை விட்டு நீயே வெளியே சென்று விடு' என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வம், தம்பி என்றும் பாராமல் உருட்டுக்கட்டையாலும், செங்கல்லாலும் ராஜகணபதியின் தலையில் தாக்கி படுகொலை செய்துள்ளார். கொலைக்கு பயன்படுத்திய செங்கல், உருட்டுக்கட்டை உள்ளிட்ட சில முக்கியத் தடயங்களையும் காவல்துறையினர் சேகரித்துள்ளனர். இதையடுத்து செல்வத்தை கைது செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்ற உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்