தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்றுநர்கள் சங்கத்தினர், தங்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி சென்னை மாநிலத் திட்ட இயக்க வளாகத்தில் (டி.பி.ஐ) தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர். இன்று அவர்கள் கண்களில் கறுப்புத் துணி கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து நக்கிரன் இணையத்திற்கு அச்சங்கத்தின் மாநிலப் பொருளாளர் கணபதி பேட்டி அளித்தார். அவர் குறியதாவது; “கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் இருந்து வந்திருக்கிறேன். தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலிருந்து இப்போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறோம். 20 ஆண்டுகளாக எந்த அடிப்படை சலுகைகளும் இல்லாமல் வேலை செய்துவருகிறோம். எங்களின் ஒரே கோரிக்கை பணி நிரந்தரம். 1998ஆம் ஆண்டு முதல், ஏறக்குறைய 1761 சிறப்பு பயிற்றுநர்கள் வேலை செய்கிறோம். தற்போது, வெறும் ரூ.16,000தான் ஊதியம் பெறுகிறோம். அந்த ஊதியமும் எங்களுக்கு நேரடியாக வராது.
பள்ளி மேலாண்மைக் குழு என ஒன்று வைத்திருக்கிறார்கள் அதில், பள்ளி தலைமை ஆசிரியரும் அந்தப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனின் பெற்றோரும் இணைந்து கையெழுத்திட்டு காசோலையைக் கொடுப்பார்கள். அதனை வங்கியில் கொடுத்து அதன் மூலமாகத்தான் எங்களுக்கு ஊதியம் கிடைக்கும். இதனால், பணம் கைக்குவரவே 20ஆம் தேதி ஆகிவிடும். அந்த மாணவனின் பெற்றோர் படித்திருக்கிறார்களா இல்லையா எனத் தெரியாது. ஆசிரியர்களான நாங்கள் அவர்களிடம் சென்று கையெழுத்து வாங்க வேண்டும். சில சமயம் அவர்கள் எங்கேனும் பணியில் இருப்பார்கள். அங்கே தேடிச் சென்று கையெழுத்து வாங்க வேண்டியிருக்கும். எந்தத் துறையிலும் இதுபோன்ற அவலநிலை இல்லை.
பணியில் இருக்கும்போதே கிட்டத்தட்ட 25 ஆசிரியர்கள் விபத்து உள்ளிட்ட காரணங்களால் இறந்திருக்கிறார்கள். அவர்களுக்கு பி.எஃப்., இ.எஸ்.ஐ. நிதி உதவி, என இதுவரை எதுவுமில்லை. 29-01-2021 அன்றிலிருந்து நாங்கள் போராட்டம் நடத்திவருகிறோம் இன்றுடன் எட்டு நாட்களாகிறது. மாநிலத் திட்ட இயக்கம் (டி.பி.ஐ.) வளாகத்தில் போராடிவருகிறோம்.
எங்கள் துறை இயக்குநர் லதா ஐ.ஏ.எஸ்., தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தமிழக கல்வித்துறை செயலர், எதிர்க் கட்சித் தலைவர், பள்ளி கல்வித்துறை கமிஷ்னர் மற்றும் தமிழகப் பள்ளி கல்வித்துறை முதல்வர் ஆகியோரிடம் எங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரை அரசு தரப்பிலிருந்து யாரும் எங்களை அழைத்துப் பேசவில்லை. காவல்துறை மூலமாக நாங்களாகக் கேட்டு, மாநிலத் திட்ட இயக்குநரிடம் சென்றோம், அவர்களும் “உங்களைப் பணி நிரந்தரம் செய்யும் அதிகாரம் எனக்கில்லை” எனத் தெரிவித்துவிட்டார். எங்கள் ஒரே கோரிக்கையான பணி நிரந்தர ஆணை வந்தால் மட்டுமே இந்த இடத்தைவிட்டு நாங்கள் நகர்வோம். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். குறிப்பிட்ட நாட்கள்வரை அமைதியான காத்திருப்புப் போராட்டமாக இருக்கும்; அதன்பின் மாற்று வழிகளில் போராட்டங்களை நடத்துவோம்” என்று தெரிவித்தார்.