தென்காசி மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய காய்கறி சந்தையான, பாவூர்சத்திரம் காமராஜர் காய்கறி மார்க்கெட்டுக்கு கீழப்பாவூர் ஒன்றிய பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ தரம் வாரியாக ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனையாகி வருகிறது. வரலாறு காணாத விலை உயர்வால், வெளிநாடுகளில் இருந்து பல்லாரி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது.
பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு பெங்களூரு, சோலாப்பூர், புனே, நகரி உள்பட பல்வேறு நகரங்களிலிருந்து வெங்காயம் வரவழைக்கப்பட்டது. தற்போது அப்பகுதியிலும் மழை காரணமாக வரத்து குறைந்து பல்லாரி கிலோ ரூ.140 முதல் 155 வரை அதிகரித்தது. இந்நிலையில் எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல்லாரியை மொத்த வியாபாரிகள், பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதனால் பல்லாரி விலை குறையுமென எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனாலும் பொதுமக்கள் உள்ளூர் பல்லாரியையே விரும்பி வாங்கிச் சென்றனர். இதனால் பல்லாரி விலையில் மாற்றமின்றி விற்பனையானது.
இதுகுறித்து காய்கறி மொத்த வியாபாரி கஜேந்திரன் கூறுகையில், இந்திய பல்லாரி மரபணு மாற்றம் செய்யப்பட்ட பல்லாரி என்பது மட்டுமின்றி நீண்ட நாள் தாக்குப்பிடிப்பதால், நீர்சத்து குறைவாக இருப்பதால் உள்ளூர் மற்றும் கேரள வியாபாரிகள் அதிகளவு வாங்கிச் செல்கின்றனர். ஆனால் எகிப்து பல்லாரி சிவப்பு நிறத்திலும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் மக்கள் அதை விரும்பவில்லை, என்றார்.
இதனிடையே தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எகிப்து நாட்டின் பல்லாரி நான்கு லோடு 450 மூட்டைகள் பாவூர்சத்திரம் சந்தை வியாபாரிகள் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளனர். முதல்நாள் விற்பனை மந்தம் என்றாலும் மறுநாள் கேரளாவின் கொல்லம், புனலூர் வியாபாரிகள் 50, 70, 100 மூட்டைகள் என மொத்தமாக வாங்கிச் சென்றதால் உடனடியாகக் காலியாகியுள்ளது. இதனால் உள்ளூர் மக்கள், விரும்பியும் வாங்கமுடியாமல் போய்விட்டதே என்ற நிலையிலிருக்கிறார்களாம்.
இந்த நிலையில் சிறிய வெங்காயம் மழை காரணமாக பாவூர்சத்திரச் சந்தையில் 130 முதல் 150 வரை கிலோ போகிறது. விளாத்திகுளம், மதுரை மாவட்டங்களிலிருந்து இனிவரும் அறுவடையைப் பொறுத்து விலை குறையலாம் என்கிறார்கள் வியாபாரிகள்.