திருப்பூரை அடுத்துள்ள பாண்டியன் நகரில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் ஏராளமான நாட்டு வெடி குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது வீட்டில் இன்று (08.10.2024) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி 9 மாத குழந்தை, ஒரு பெண் என மொத்தம் மூன்று பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வெடி விபத்தில் அருகில் இருந்த 10 வீடுகள் சேதமடைந்தன. இது தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த விபத்திற்கு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகளே காரணம் எனத் தெரியவந்தது.
அதோடு கார்த்திக் வீட்டில் இருந்த சுமார் 50 கிலோ வெடி மருந்தைப் பறிமுதல் செய்த போலீசார் பாதுகாப்பாக அதனை அங்கிருந்து அகற்றினர். மேலும் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு நடத்தினர். திருப்பூரில் நாட்டு வெடி குண்டுகள் வெடித்த விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பட்டாசு தயாரிப்பு உரிமத்தை ஈரோட்டில் வைத்துள்ள சரவணகுமார் என்பவர், அவரது உறவினரான கார்த்திக்கின் வீட்டில் வைத்து கோயில் விழாவுக்குச் சட்ட விரோதமாகப் பட்டாசு தயாரிக்கும் போது வெடிவிபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த விபத்து நிகழ்ந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதே சமயம் இந்த வெடி விபத்து தொடர்பாக 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருப்பூர் பாண்டியன் நகர்ப் பகுதியில் ஏற்பட்ட நாட்டு வெடிகுண்டு விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் நாட்டு வெடிகள் தயாரித்து வந்ததை திமுக அரசும், காவல்துறையும் அறிந்திருக்காமல் இருந்தது ஏன்?. திமுக ஆட்சியில் அனைத்து மட்டங்களிலும் நிர்வாகம் என்பது அறவும் செயல்பாட்டில் இல்லை என்பதையே தொடர்ச்சியான நிகழ்வுகள் உணர்த்தும் செய்தி. தொடர்ந்து மக்கள் பாதுகாப்பு குறித்த விஷயங்களில் திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. இந்த விபத்திற்கான காரணத்தை உரிய விசாரணை மூலம் கண்டறியுமாறும், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் குடியிருப்பு பகுதிகளுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.