Skip to main content

புதிய குற்றவியல் சட்டங்கள்; எதிர்த்தும் ஆதரித்தும் வழக்கறிஞர்கள் மோதல்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
nn

புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் ஜூலை ஒன்றாம் தேதியான (01/07/2024) இன்று நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்தநிலையில் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது முதல் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி கம்லா மார்க்கெட் பகுதியில் சாலையோர கடை நடத்தி வந்த ஒருவர் பாதசாரிகளுக்கு இடையூறாக நடந்து கொண்டதாக 'பாரதிய நியாய சன்ஹிதா' எனும் புதிய குற்றவியல் சட்ட வழக்கு முதல் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய குற்றவியல் சட்டங்களின் அம்சங்கள்: ஆங்கிலேயக் காலத்து ஐ.பி.சி, சி.ஆர்.பி.சி, ஐ.இ.ஏ சட்டங்களுக்கு மாற்றாகப் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சக்ஷ்ய அதிநியம்  உள்ளிட்ட சமஸ்கிருத பெயர்களில் புதிய குற்றவியல் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. விசாரணை நிறைவடைந்த 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்; முதல் நீதிமன்ற விசாரணை நடைபெற்ற நாளிலிருந்து அறுபது நாட்களுக்குள் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டும்; எங்குக் குற்றம் நடந்தாலும் எந்தக் காவல் நிலையத்திலும் புகார் செய்யலாம்; காவல்துறையிடம் இணைய வழியில் புகார்களைப் பதிவு செய்தல் மற்றும் அழைப்பாணைகளை அனுப்புதல்; குற்றம் நடைபெற்ற இடங்களைக் கட்டாயம் காணொளியாகப் பதிவு செய்தல் வேண்டும்; கொடூர குற்றங்களில் தடயவியல் நிபுணர்கள் குற்றம் நடந்த இடங்களுக்குச் சென்று சாட்சியங்களைச் சேகரிப்பது கட்டாயம்; பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பிற்காக வீடியோ, ஆடியோ மூலம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
 

புதுச்சேரியில் குற்றவியல் சட்டங்களை அம்மாநில முதல்வர் ரங்கசாமி அமல்படுத்தியுள்ளார். இந்நிலையில் மதுரையில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர்களின் ஒரு பிரிவு உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதேபோல் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து மற்றொரு வழக்கறிஞர்கள் குழு போராட்டம் நடத்தி வருகிறது. இதில் இருதரப்பு வழக்கறிஞர்களுக்கிடையே கைகலப்பு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்