அந்த உயிர்பலியும் அதனையடுத்த சாலை மறியலும் மதுரையை பரபரப்பாக்கின. கருப்பாயூரணியில் கோழிக்கடை நடத்தி வந்தவர் 75 வயதான அப்துல் கரீம். 5ம்தேதி காலை கடையில் வெளியே உள்ள கூண்டில் கோழிக்களுக்கு தீவனம் கொடுக்க வந்திருக்கிறார். ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள், கரீம் தடையை மீறி கோழிக்கடையை திறக்க வந்ததாக எண்ணி அவரையும் அவர் மருமகனையும் தாக்கியதாகவும், மூர்ச்சையான கரீம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பயனில்லாமல் மரணம் அடைந்ததாகவும் தெரிவித்தனர். இதனால் மதுரை-சிவகங்கை சாலையில் மறியலில் ஈடுபட்டனர் உறவினர்களும் அக்கம்பக்கத்தினரும்.

காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் இன்ஸ்பெக்டர் மாடசாமி நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து உடலை வீட்டுக்கு எடுத்து சென்றனர், இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்ட பொழுது "ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் யாரும் சாலையில் நிற்க வேண்டாம் என மட்டுமே காவல்துறை அறிவுறுத்தல் செய்தது, உடல்நல குறைவால் அப்துல் கரீம் உயிரிழந்து உள்ளார். பிரேத பரிசோதனைக்கு நாங்கள் தயாராக உள்ளோம்'' என்றனர்.

இந்நிலையில் அப்துல் கரீமின் மகன் முகம்மது சேட் தனது தந்தை உடல்நல குறைவால் உயிரிழந்ததாகவும், உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் எனவும் கடிதம் கொடுத்து உள்ளார். சம்பவ நேரத்தில், அப்துல் கரீம் உடன் இருந்த மருமகன் ஷாஜகான் காவல்துறைக்கு கொடுத்த கடிதத்தில் சாலை ஒரத்தில் நின்று கொண்டு இருந்த பொழுது, என்னை தாக்கிய காவலர் கணேசன் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார். அப்துல் ரஹீமின் மனைவியோ, "அநியாயமாக என் கணவர் இறந்து விட்டார் இதில் நான் ஒன்னும் சொல்லமுடியாது தம்பி. எல்லாத்தையும் என் மகனிடம் கேட்டுகொள்ளுங்கள்'' என்றார். மகன் சேட்டோ நம்மிடம் பேச மறுத்தார்...

அங்கிருந்த பிலால் நம்மிடம்... "கோழிகடையும் அப்துல் கரீமின் வீடும் அருகருகே உள்ளது. கோழி கூண்டு கடையின் வெளியேதான் இருக்கும். சம்பவத்தன்று முதலில் இரண்டு போலிஸார் கோழிகறியை இலவசமாக வாங்கிகொண்டு சென்றுள்ளனர் அடுத்து வந்த ஒருவர், அய்யா கறி வாங்கிவர சொன்னார் என்று மிரட்டல் தொனியில் சொல்லியிருக்கிறார். கரீம் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து வெளியில் கூண்டில் இருந்த கோழிகளுக்கு தீவனம் போட்டுகொண்டு இருந்திருக்கிறார். அப்போது திடீரென கும்பலாக வந்த போலீஸார் என்ன ஏது எதுவும் கேட்காமல் அவரையும், அவரது மருமகன் ஷாஜகானையும் கண்மூடிதனமாக அடித்துள்ளனர். அதனால்தான் இந்த விபரீதம். அது, போலீஸ் நிர்பந்தத்தால் இயற்கை மரணமாகிவிட்டது'' என்றார். போலீசார் இது இயற்கையாகவே, இயற்கை மரணம்தான் என்கின்றனர்.