சென்னையில் 70 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்சிபி அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் கொடுத்துள்ளனர். மெத்தம்பட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக என்சிபி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 ஆம் தேதி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபர் மெத்தம்பட்டமைன் கடத்துவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. ரகசியத் தகவலை அடுத்து உடனடியாக அங்குச் சென்ற அதிகாரிகள் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் ஐந்து கிலோ 900 கிராம் மெத்தம்பட்டமைன் வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டு உடனடியாக கைது செய்யப்பட்டார்.
நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் அந்த நபரின் பெயர் ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பைசல் ரகுமான் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 5 கிலோ 900 கிராம் மெத்தம்பட்டமைனை பறிமுதல் செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ராம்நாடு பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம், மன்சூர் ஆகியோரும் கடத்தலில் ஈடுபட்டது தெரிந்தது.
இந்நிலையில் சென்னை செங்குன்றம் பகுதியில் இருந்த இப்ராஹிம், மன்சூர் ஆகிய இருவரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் இருந்து சுமார் 954 கிராம் மெத்தம்பட்டமைன் போதைப் பொருள் இருப்பது தெரிந்து பறிமுதல் செய்தனர். கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 5 கிலோ 900 கிராம், சென்னை செங்குன்றம் பகுதியில் 954 கிராம் என மொத்தமாக 7 கிலோ மெத்தம்பட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் மதிப்பு 70 கோடி ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று நபர்களிடம் இருந்து ஒன்பது லட்சம் ரூபாய் பணத்தையும் மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.