Skip to main content

வரதட்சணை கேட்டு அடித்த ஆயுதப்படை வீரர்; தமிழக பெண்ணிற்கு நேர்ந்த சோகம்

Published on 31/12/2022 | Edited on 31/12/2022

 

Dowry abuse of paramilitary soldier; Tragedy for Tamil Nadu girl

 

சென்னை காரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசெல்வன். இவரது மகள் நிவேதா. 23 வயதான நிவேதாவிற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஆந்திராவைச் சேர்ந்த சங்கர் என்பவருடன் திருமணம் நடந்தது. சங்கர் மத்திய தொழில் பாதுகாப்புப் படை காவலராகப் பணிபுரிகிறார்.

 

இத்தம்பதிக்கு 3 வயதில் நேகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நிவேதாவிடம் சங்கர் வரதட்சணையாக பணம் மற்றும் நகைகளைக் கேட்டுள்ளார். சங்கரும் அவரது குடும்பத்தாரும் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமை செய்து நிவேதாவை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். மேலும் விவாகரத்து பெற்று சென்றுவிடுமாறும் நிவேதாவினை மிரட்டியுள்ளனர்.

 

இதனைத் தொடர்ந்து நிவேதா தனது தாயிடம் முறையிட்டுள்ளார்.ஆந்திரா சென்ற நிவேதாவின் தாய் அவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த நிவேதா நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வீட்டில் சோதனை செய்த காவல்துறையினர் நிவேதா தன் கைப்பட எழுதிய கடிதத்தையும் கண்டெடுத்தனர். அதில், “கணவர் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதால் தற்கொலை செய்து கொள்கிறேன்” என எழுதி வைத்திருக்கிறார்.

 

இதனை அடுத்து சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினரை காவல்துறையினர் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்