கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இச்சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் விசாரிக்கப்பட்டும் வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், என்.ஐ.ஏ எனப்படும் தேசியப் புலனாய்வு முகமை சார்பில் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது.
அதே சமயத்தில், கோட்டை ஈஸ்வரன் கோவிலில் கடந்த சில தினங்கள் முன்பு பாஜக சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு ஜமாத் நிர்வாகிகள் சென்றனர்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜமாத் அமைப்பினர், “மத நல்லிணக்க வருகையாக கோட்ட ஈஸ்வரன் கோவிலின் நிர்வாகிகளை சந்தித்து நாங்கள் உரையாடினோம். சென்ற வாரம் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு சமூகத்தினிடையே ஏற்பட்ட பதட்டத்தை நாம் அறிவோம். இஸ்லாமியர்களான நாங்கள் ஏழு தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வருகிறோம். இப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் 200 ஆண்டுகளுக்கு மேலாக மத நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.
இந்நிலையில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தினை ஜமாத் வன்மையாகக் கண்டிக்கிறது. இஸ்லாம் ஒரு போதும் வன்முறையை தூண்டும் மார்க்கம் அல்ல. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். மக்கள் ஒற்றுமையோடும் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வருவதையே நாங்கள் விரும்புகிறோம். எந்த விதமான மதப் பூசலுக்கும் எந்த விதமான அரசியலுக்கும் நாங்கள் ஆட்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம்.
இந்து முஸ்லீம் ஒற்றுமையை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருப்போம். அரசியல் தலைவர்கள் தயவு கூர்ந்து மதத்தினை அரசியலுக்கு பயன்படுத்தாதீர்கள். நாங்கள் அமைதியானவர்கள். ஆன்மீகவாதிகள். எங்களை அமைதியாக வாழவிடுங்கள்” எனக் கூறினர்.