பழனி பேருந்து நிலையத்தில் குறைந்த விலையில் செல்போன் கவர் பெற்றுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரை செல்போன் கடை உரிமையாளர் ஒருவர் தன்னுடைய வியாபாரம் பாதிக்கிறது எனக் கூறி தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகிய நிலையில் தாக்குதல் நடத்திய செல்போன் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பழனி மாநகராட்சியில் உள்ள வ.உ.சி மத்திய பேருந்து நிலையத்தில் கட்டைப் பையில் செல்போன் கவர்களை வைத்துக் கொண்டு இளைஞர் ஒருவர் குறைந்த விலைக்கு விற்று வந்தார். அந்த இளைஞரை வழிமறித்த செல்போன் கடை உரிமையாளர் ஒருவர், அவரிடம் கூலாக பேசுவதுபோல் பேச ஆரம்பித்துவிட்டு இறுதியில் பேசும் தொனியை மாற்றி, “இப்படி குறைந்த விலையில் செல்போன் கவர் வித்தா நீ இந்த இடத்தில் இருக்கமாட்ட... நீ பாட்டுக்கு கொண்டு வந்து பவுச்சை ரோட்டில் கொட்டி அம்பது, இருபது ரூபாய்க்கு வித்துட்டு போயிடுற... வாடகைக்கு கடையை எடுத்திருக்க நாங்க அப்படியே உட்கார்ந்து இருக்கணுமா?” எனச் சொல்ல, அந்த அப்பாவி இளைஞர் “20 ரூபாய்க்கு எல்லாம் விக்கிறது இல்ல. 100 ரூபாய், 50 ரூபாய்க்கு தான் விக்கிறேன்” என்றார்.
அதற்கு செல்போன் கடை உரிமையாளர், “டெய்லி உன்ன பாத்துட்டுதான் இருக்கோம். நாளைக்கு விக்கக்கூடாது சரியா...” என மிரட்டினார். அதற்கு இளைஞர் “நாளைக்கு இங்கே இல்ல வேற பக்கம், ஒட்டன்சத்திரம் பக்கம் விக்க போறேன்” என்றார். அதற்கு செல்போன் கடை உரிமையாளர், “இனிமேல் பழனிக்கு வரக்கூடாது. இன்னைக்கு பவுச் குறைஞ்ச விலைக்கு விப்பீங்க. நாளைக்கு புது மாடல் போன பாதி விலைக்கு விப்பீங்க. அதும் மதுரையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு வந்து நீ வியாபாரம் பாத்துட்டு இருக்குற. இனிமேல் இங்க விக்கக்கூடாது” எனப் பேசிவிட்டு எதிர்பாராத விதமாக 'பளார்' என அந்த இளைஞரின் கன்னத்தில் அறைந்தார்.
இந்த வீடியோ காட்சி வைரலான நிலையில் பலர் இதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இது தொடர்பாக, தாக்கப்பட்ட அந்த இளைஞர் வெளியிட்ட வீடியோவில் “நான் ராஜன். மதுரையிலிருந்து வரேன். செல்போன் கவர் வியாபாரம் பண்றேன். ஆனா அதை விற்க விட மாட்றாங்க. வேலை கேட்டா வேலை தரமாட்டேங்குறாங்க சரி இந்த தொழிலாவது செய்யலாமே என வந்தால் இதையும் செய்யவிடாமல் அடிக்கிறாங்க” எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சுதர்சன் என்ற செல்போன் கடை உரிமையாளரை கைது செய்துள்ளனர்.