தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் வி சாலை பகுதியில் நடைபெற இருக்கிறது. இதற்காக பல்வேறு கட்ட ஏற்பாடுகளை கட்சியின் தலைமை மேற்கொண்டு வருகிறது. மாநாட்டிற்கான பந்தல்கால் நடும் விழா இன்று நடைபெற்றது. இதில் தவெகவின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது குறித்து கேள்விக்கு பதிலளித்து பேசுகையில்,''விஜய்க்கு நான் சொல்லிக் கொள்வது எல்லோரும் விரும்புகின்ற ஒரு பிள்ளையாக தமிழகத்தில் இருக்கும் பொழுது அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.
விஜய் சொல்கின்ற கொள்கையை நிறைவேற்றுகின்ற கட்சிகளாக தான் மதச்சார்பற்ற கூட்டணியில் இருக்கின்ற கட்சிகள் இருக்கின்றன. எனவே அவர் காங்கிரஸில் சேரலாம், திமுகவில் சேரலாம், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேரலாம். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் தயவுசெய்து சீமானுடன் மட்டும் சேர்ந்து விட வேண்டாம். விஜய்யை பொறுத்தவரை மக்கள் அவரை ஒரு மகிழ்விக்க கூடிய கலைஞராகத்தான் பார்க்கிறார்களே ஒழிய, அவரை வழிகாட்டுகின்ற தலைவராக மக்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்'' என்றார்.