காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்தை பறித்து அதனை மத்திய நீர்வளத்துறையுடன் இணைக்கும் இந்திய அரசின் தமிழர் விரோத போக்கை கண்டித்து காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தமிழகம் முழுவதும் அவரவர் வீட்டின் முன்பாக நின்று காவிரி உரிமைக்காக முழக்கமிடும் போராட்டம் இன்று மாலையில் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டார்.
இது குறித்து வேல்முருகனிடம் நாம் பேசிய போது, "காவிரிப் பிரச்சனை சுதந்திரத்துக்கு முன் இல்லை. சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு, 1968-ல் காவிரி பிரச்சனை தொடங்கிவிட்டது. இன்றும் தொடர்கிறது. இப்போது காவிரி மேலாண்மை ஆணையம் எனும் தன்னாட்சி அதிகாரமுடைய தீர்ப்பாயத்தை, ஜல் சக்தி எனும் புதிய துறையை ஏற்படுத்தி, தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது ஒன்றிய அரசு. இப்படிச் செய்ததற்குக் காரணம், கூட்டாட்சித் தத்துவம் சொல்கின்ற அதிகாரப் பரவலுக்கு மாறாக, அதிகாரக் குவிப்பு எனும் ஃபாசிச ரத்தமே பாஜகவின் உடம்பில் ஓடுவதாகும். அப்படி அனைத்து அதிகாரங்களையும் தானே வைத்துக்கொள்வது , பிரச்சனைகள் வரும் போது ஜன்நாயக ரீதியில் நடந்து கொள்ளாமல், தனக்கு வேண்டிய மாநிலத்தின் பக்கம் நின்று கொண்டு, மற்ற மாநிலத்தைக் குற்றம்சாட்டி, இது வரை பிழைத்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.
மக்களாட்சிக்கான இலக்கணமே... ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலான அதிகாரப் பரவல் என்பதுதான். எனவே காவிரி மேலாண்மை ஆணையத்தை ஒன்றிய அரசு, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கக் கூடாது. இது, மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சியே மாநிலத்திலும் இருந்தால் அதற்கே சாதகமாக மத்திய அரசும் நிற்க வழிவகுக்கும். அதற்காகத்தான் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பாதுகாப்பு, நாணயம் அச்சிடல், மாநிலங்களுடன் இணைந்த அயலுறவு ஆகிய துறைகள் தவிர மிச்சமனைத்தும் மாநிலங்களுக்கானவையே! அவைகள் உடனடியாக மாநிலங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
எனவே , காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னதிகாரத்தைப் பறித்து அதனை ஜல் சக்தித் துறையின் கீழ் இணைத்த ஒன்றிய அரசின் முடிவைக் கண்டித்து “காவிரி உரிமை மீட்புக் குழு”வின் சார்பில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் ஒன்றிணைந்து இன்று போராட்டதை நடத்தியிருக்கிறோம்.
காவிரியில் தானாகத் தலையிட்டு, தன் மேலாதிக்கத்தைத் திணிக்கவும் நிலைநிறுத்தவும் பார்க்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக மோடி அரசின் ஃபாசிச நடவடிக்கைகளைக் கண்டிக்கிறோம். காவிரி பிரச்சனையில் தலையிட மத்திய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? ஃபாசிச மோடி அரசே, காவிரி ஆணையத்தைத் தொடாதே! சுதந்திரமாக விடு! மாநிலங்கள்தான் இந்தியா என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் ! " என்கிறார் ஆவேசமாக.
காவிரி ஆணையத்தை பாதுக்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுத்த இந்த போராட்டத்தில், மத்திய அரசை கண்டிக்கும் பாதாகைகள் இடம் பிடித்திருந்தன.