நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு, 'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.