மதுரையில் இருசக்கர வாகனத்தை வளைவில் முந்த முயன்ற இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து மீது மோதி விபத்து ஏற்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் இருக்கும் சாலை வளைவு பகுதியில் மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து தேனி நோக்கி தனியார் பேருந்து கொண்டு சென்று கொண்டிருக்கிறது. அப்பொழுது எதிர்புறமாக மதுரை என்ஜிஓ காலனி பகுதியில் வசித்து வந்த துரையரசன் எனும் கல்லூரி மாணவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது முன்னே சென்ற இருசக்கர வாகனத்தை வளைவில் முந்த முயன்ற அவர் வளைவில் திரும்பிய தனியார் பேருந்தின் மீது மோதி விழுந்தார்.
இதில் அவருடைய வாகனம் பல்டி அடித்தபடி சாலையில் விழுந்தது. மாணவன் பேருந்து சக்கரத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த துரையரசனை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.